கோடை வெயில்: மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு - தீர்வு என்ன?

கோடை வெயில்: மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு - தீர்வு என்ன?
Updated on
2 min read

மதுரை; கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிய ஒரே வாரத்தில் மதுரை தெப்பக்குளத்தில் நீர் மட்டம் பல அடி ஆழத்திற்கு குறைந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் கரையில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிகளவு திரள்வார்கள். தெப்பக்குளத்தின் நீளம் 1000 அடியாகவும், அகலம் 950 அடியாகவும், ஆழம் 29 அடியாகவும் உள்ளது. தெப்பக்குளத்தின் நீர் கொள்ளவு 115 கன அடியாக உள்ளது. இந்த குளம் மதுரை நகர்பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்திற்கும் குளிர்ச்சியான சீதோஷனநிலைக்கும் உதவுகிறது. கடந்த காலத்தில் மதுரைக்கு சுற்றுலாவுக்கு வருவோர், தெப்பக்குளத்தின் அழகை பார்த்து ரசிக்காமல் செல்ல மாட்டார்கள். தெப்பக்குளத்தில் குழந்தைகளையும், சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்விக்க படகு சவாரிவிடப்பட்டது.

ஏராளமான சினிமா திரைப்படங்களும் எடுக்கப்பட்டதால் மதுரை தெப்பக்குளம் தமிழக அளவில் பிரபலமடைந்தது. இடையில் சில ஆண்டு காலம், தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவது தடைப்பட்டது. நிரந்தரமாக தெப்பக்குளம் வறட்சிக்கு இலக்காகி தெப்பக்குளம் களையிழந்து காணப்பட்டது. சிறுவர்கள் கிரிக்கெட்டும் விளையாடும் மைதானமாக பயன்படுத்த தொடங்கினர். மாலை நேரங்களில் மக்கள் வருவதும் குறைந்தது. அதனால், தெப்பக்குளம் சுற்றுலா அந்தஸ்தை இழந்தது.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் வைகை ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் வரும் வகையில், ஏற்கணவே தூர்ந்து போய் கிடந்த கால்வாய்களை தூர்வாரி ஆற்றில் இருந்து தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால், மீண்டும் பழையப்படி மக்கள் தெப்பக்குளம் வர ஆரம்பித்தனர். படகு சவாரியும் விட்பட்டது. ஆனால், கடந்த சில மாதமாக வைகை ஆற்றில் நீரோட்டம் இல்லை. சாக்கடை நீர் மட்டுமே ஓடுகிறது.

அதனால், ஆற்றில் இருந்து தண்ணீர் வருவது ஒரு புறம் தடைப்பட்டது. மற்றொரு புறம் மதுரையில் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 2 வாரமாக கோடையின் தாக்கம் ஆரம்பித்துள்ளது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக உச்சப்பட்சமாக மக்கள் பகல் பொழுதில் வெளியே நடமாட முடியாத அளவிற்கு சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. அதனால், தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீர் வேகமாக குறையத்தொடங்கியது. கடந்த மாதம் நடந்த தைப்பூசம் தெப்பக்திருவிழாவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்பட்டது.

தற்போது பல அடி ஆழத்திற்கு நீர் மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால், படகுப்போக்குவரத்து விரைவில் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தெப்பக்குளத்தில் தண்ணீர் காணப்பட்டபோது, மாலை நேரங்களில் ஆயிரகணக்கான மக்கள், தெப்பக்குளம் பகுதிக்கு திருவிழா போல் வந்தனர். ஒரு புறம் மக்கள், நடைப்பயிற்சி செய்வதும், மற்றொரு புறம் தெப்பக்குளம் பகுதியில் திறக்கப்படும் மாலை நேர கடைகளில் குழந்தைகளுடன் சென்று அவர்களுக்கு விரும்பியதை வாங்கி கொடுப்பதுமாக கூட்டம் களைகட்டும். அதனால், தண்ணீர் குறைந்ததால் முன்வந்த கூட்டம் தற்போது இல்லை. பெரியாறு அணை நீர் மட்டம் 116.75 அடியாகவும், வைகை அணை நீர் மட்டம் 54 அடியாகவும் உள்ளது.

சித்திரைத் திருவிழாவுக்கு முன் தண்ணீர் திறந்தால் வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்திற்கு வரும்பட்சத்தில் ஓரளவு நீர் மட்டம் வீழ்ச்சியடைவது குறையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in