

பொள்ளாச்சி: ஆழியாறு அணையில் முதலை நடமாட்டம் உள்ளதால், சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்க வேண்டாம் என பொதுப்பணி மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணை உள்ளது. தற்போது மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால், அணையின் உள்ளே உள்ள பாறைகள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் வெளியே தெரிகின்றன. நீர்மட்டம் குறைந்துவிட்டதால் சித்தாறு, கவியருவி ஆகியவை சேரும் அணைப் பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணி மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "ஆழியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாததால், நீர்மட்டம் குறைந்து 60 அடியாக உள்ளது.
நீர்மட்டம் குறைந்ததால், அணையில் உள்ள முதலைகள் கரைப்பகுதிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆழியாறு அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்குவது, வனப்பகுதியிலுள்ள அணை பகுதிக்குள் செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது.
ஆங்கிலேயர் கால பாலம் மற்றும் அறிவு திருக்கோயிலுக்கு எதிரே அணைக்குள் சுற்றுலா பயணிகள் இறங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும், தண்ணீர் குறைவாக இருப்பதால் சேற்றில் சிக்கியும் உயிரிழப்பு ஏற்படக்கூடும். சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்வதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அணைக்குள் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆங்கிலேயர் பாலம் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றனர்.