

திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. விடுமுறை தினமான நேற்று மழைச்சாரலில் நனைந்தபடி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழிலைக் கண்டு ரசித்தனர்.
கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். கடந்த வாரம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பரவியதால் பனி மூட்டத்துக்குப் பதிலாக மலைப்பகுதி புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் சில நாட்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்திருந்தது.
இந்நிலையில், சில நாட்களாக கோடைமழை பெய்து வருவதால் நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலாத் தலங்களில் சாரலில் நனைந்தபடி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழிலை ரசித்தனர்.
பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டனில் பூச்செடிகளுக்கு கவாத்து வெட்டி கோடை சீசனுக்கு தயார்படுத்தி வருவதால், பூக்கள் இல்லாத நிலை உள்ளது. இதனால் பூங்கா பகுதியில் குறைவான எண்ணிக்கையிலேயே சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனர்.
ஆனால், மோயர் பாய்ன்ட், குணா குகை, தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மேகக்கூட்டங்கள் இறங்கி வந்து தழுவிச் செல்வதால் சுற்றுலாப் பயணிகள் இயற்கையை மெய்சிலிர்த்து அனுபவித்தனர்.
ஏரிச் சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரியில் மழையில் நனைந்தபடிபடகு சவாரி செய்தனர். இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடைமழை தொடரும் நிலையில், மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் மேலும் குறைந்து இதமான தட்பவெப்ப நிலை நிலவும். பள்ளித் தேர்வுகள் முடிந்தால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானலில் நேற்று பகலில் அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரியும் (செல்சியஸ்) குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரியும் இருந்தன. பகலில் சாரலும், இரவில் குளிர்ந்த காற்றும் வீசியது. காற்றில் ஈரப்பதம் 70 சதவீதம் காணப்பட்டதால் இதமான தட்பவெப்ப நிலை நிலவியது.