Last Updated : 19 Mar, 2023 02:55 PM

 

Published : 19 Mar 2023 02:55 PM
Last Updated : 19 Mar 2023 02:55 PM

குவிந்த சுற்றுலா பயணிகள் - கன்னியாகுமரி மற்றும் திற்பரப்பில் அலைமோதிய கூட்டம்

குமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமையான இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் திற்பரப்பு அருவியில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று, மாவட்டத்தின் பிரச்சித்திப் பெற்ற சுற்றுலா தலங்களான திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம் உட்பட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சீஸன் நேரம், பண்டிகை விடுமுறை காலம், வார இறுதி விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். சனிக்கிழமையான நேற்று அதிகாலையில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மதியத்திற்கு பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனால் இன்று அதிகாலையில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா மையங்களில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்களும், கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் கூடினர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் படகு பயணம் மேற்கொண்டு விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு சென்று வந்தனர். சுற்றுலா படகு கட்டணம் 50 சதவீதம் உயர்ந்த போதிலும் வழக்கம்போல் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதைப்போல் கோடைகாலம் போன்று சுட்டெரித்து வரும் வெயிலுக்கு மத்தியில் திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்தனர். மேலும் ஆசியாவிலேயே உயரமானதும், நீளமானதுமான மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரி கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, சங்குத்துறை பீச், கோவளம் பீச், லெமூரியா பீச் ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, திற்பரப்பு செல்லும் சாலை போன்றவற்றில் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x