

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பற்றி எரிந்து வந்த காட்டுத் தீ, மழை காரணமாக கட்டுக்குள் வந்தது. இதனிடையே, மலைப் பகுதிகளில் தீ பரவாமல் தடுக்க விளைநிலங்களில் தீ வைக்கவும், விடுதிகளில் கேம்ப் பஃயர் நிகழ்ச்சிக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வந்தது. அடர்ந்த காட்டுப் பகுதியில் தீ பற்றி எரிந்ததால் மூலிகைச் செடிகள், விலை உயர்ந்த மரங்கள் கருகின. வனவிலங்குகள் இடம்பெயர்ந்தன. சில தீயில் கருகி பலியாகின. வனத் துறையினர் பெரும்முயற்சி எடுத்தும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஓரளவு கட்டுப்படுத்தியும், அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று தீயை அணைப்பது சவாலாக இருந்தது. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதி பனிமூட்டத்திற்கு பதிலாக புகை மூட்டமாக காணப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை கொடைக்கானல் மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்தது. ஒரே நாளில் 48.5 மி.மீ., மழை பெய்ததால் காட்டுத் தீ முழுவதுமாக கட்டுக்குள் வந்தது. மலைப் பகுதி முற்றிலும் குளிர்ந்தது. இதனால் கொடைக்கானல் பகுதி மக்களும், வனத் துறையினரும் நிம்மதியடைந்தனர். மழை காரணமாக வெள்ளிநீர் வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டியது.
இந்நிலையில், கொடைக்கானல் வன மாவட்ட அலுவலர் திலீப்குமார் கூறியதாவது: “கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் மற்றும் சிகரெட் துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், மதுபாட்டில்களை வனப் பகுதிக்குள் சிலர் தூக்கி வீசிவருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதனால், கடந்த சில தினங்களாக வனப் பகுதிகளில் காட்டு தீ எரிந்து வந்தது. இதன் காரணமாக வன விலங்குகள் பாதிப்படையும் சூழலும் வனப் பகுதிகள் சேதமடையும் சூழலும் ஏற்பட்டது. இதுபோன்ற செயல்களில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபடக்கூடாது. எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை சுற்றுலா வரும்போது சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த வேண்டாம்.
மேலும், தனியார் விளைநிலங்களில் உரிமையாளர்கள் வனத் துறை அனுமதியின்றி தீ வைக்கக் கூடாது. இதனால் அருகிலுள்ள வனப்பகுதிகளில் தீ பரவும் அபாயம் உள்ளது. இதில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். தனியார் தங்கும் விடுதிகளில் கேம்ப் ஃபயர் போன்ற நிகழ்ச்சிகள் கோடைக் காலங்களில் நடத்தக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.