Published : 07 Mar 2023 06:21 AM
Last Updated : 07 Mar 2023 06:21 AM

8 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் இயக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு 8 மாதங்களுக்கு பிறகு படகு போக்குவரத்து நேற்று தொடங்கியது. திரளான சுற்றுலா பயணிகள் படகில் பயணம் மேற்கொண்டனர்.

கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை உப்பு காற்றால் சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறும். அதன்படி ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி தொடங்கியது.

சிலையை சுத்தம் செய்து வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. நவம்பர் மாதத்துக்குள் பராமரிப்பு பணியை முடித்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் கனமழை மற்றும் சூறைக்காற்றால் பராமரிப்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

ஜனவரி மாத தொடக்கத்தில் திருவள்ளுவர் சிலையின் மேல் பகுதியில் பராமரிப்பு பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து சிலையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் பிரிக்கப்பட்டு, பீடம் பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் இயக்க சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. 8 மாதங்களுக்கு பிறகு படகு சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பாபு தலைமையில் திருவள்ளுவர் சிலை பாதத்தில் மலர்தூவி பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ் வரம் யூனியன் தலைவர் அழகேசன், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x