

உதகை: சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு வெளிநாடுகள்,மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வருபவர்களில் புதுமண தம்பதிகள், காதலர்களின் தேர்வாக உதகையை அடுத்த ஃபைன் பாரஸ்ட் சுற்றுலா தலம் திகழ்கிறது. உதகையிலிருந்து 15 நிமிட பயணத்தில் இங்கு செல்லலாம். இங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிகள், மூடுபனியால் மறைக்கப்பட்டு மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கிறது.
இப்பகுதியில் எப்போது வீசும் சில்லென்ற காற்றும், பட்டாம்பூச்சிகளின் வருகையும் மனதுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இப்பகுதிக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணம் கிடைக்காவிட்டால், விலை உயர்ந்த பொருட்கள் திருடிச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் கேரளா மாநிலத்தில் இருந்து வந்த தம்பதி, ஃபைன் பாரஸ்ட் பகுதியில் தங்களது காரை நிறுத்திவிட்டு இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர். திரும்ப வந்த போது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு 3 பவுன் நகை, பரிசுபொருளாக கிடைத்த வைர மோதிரம் காணாமல் போயிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் உதகை புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி தலைமையிலான போலீஸார் சென்று, அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். ஆனால், திருட்டு சம்பவம் குறித்து சரியான துப்பு கிடைக்கவில்லை. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் இருந்திருந்தால், திருட்டு சம்பவத்தில் ஏதேனும் தகவல் கிடைத்திருக்கும்.
எனவே கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போலீஸார் கூறும்போது, "சம்பவம் நடந்தது வனப்பகுதி எல்லை என்பதால், என்ன நடந்தது என்று உறுதியாக தெரியவில்லை. ஒரு சில நேரங்களில் பொருட்களை தொலைத்து விட்டோ அல்லது விற்பனை செய்துவிட்டோ இதுபோன்ற புகாரை சுற்றுலா பயணிகள் அளிக்கலாம்.
அல்லது உண்மையாகவே பொருள் திருடுபோயிருக்கலாம். அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், என்ன நடந்தது என்று உறுதியாக தெரிய வில்லை. அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தி, மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றனர்.