

சென்னை: சிங்கப்பூர் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், சிங்கப்பூர் பயணத் துறை கழகம், தொழில் துறை செயல்பாட்டாளர்களுடன் இணைந்து சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதையொட்டி, சென்னையில் நேற்று சிங்கப்பூர் பயணத் துறைகழகம் சார்பில், வர்த்தக செயல்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா பகுதிகளுக்கான சிங்கப்பூர் பயணத் துறை வாரிய மண்டல இயக்குநர் ஜி.பி.ஸ்ரீதர், பகுதி இயக்குநர் ரென்ஜி வோங்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்துமண்டல இயக்குநர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2022-ல் சிங்கப்பூருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வருகைபுரிந்த 6.3 மில்லியன் பயணிகளில், இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 6.86 லட்சமாகும். இது 2019-ம் ஆண்டு பயணிகள் வருகையுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதமாகும்.
தற்போது இந்தியா-சிங்கப்பூருக்கு இடையே கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சிங்கப்பூரின் 2-வது மிகப் பெரிய பயணச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்திய இளையதலைமுறையினரையும், திருமணப் பயணங்களையும் சிங்கப்பூருக்கு ஈர்க்கும் வகையில் ‘ஒன்றாக இணைந்து மீட்சிக்கான வழிகளை மேம்படுத்துவோம்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்ட, வர்த்தக செயல்பாட்டை சிங்கப்பூர் பயணத் துறை கழகம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, குடும்பச் சுற்றுலாக்கள், வர்த்தகம் சார்ந்தபயணங்கள், சொகுசு கப்பல் விடுமுறை பயணங்கள் ஆகியவற்றை கூட்டு செயல்பாட்டாளர்களுடன் இணைந்து அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
சென்டோசாவின் கேளிக்கை குடும்பச் சுற்றுலா, சென்சரிஸ்கேப் அனுபவப் பூங்கா, மாண்டாய் வனவிலங்கு காப்பகத்தின் பறவைகள் பாரடைஸ் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. இவை இந்திய சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் என்று அவர் கூறினார்.