சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பழநி வையாபுரி குளத்தில் விரைவில் படகு சவாரி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

பழநி: பழநியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் வையாபுரி குளத்தில் விரைவில் படகு சவாரி தொடங்கப்பட உள்ளது.

பழநி நகரின் மையத்தில் அமைந்துள்ளது வையாபுரி குளம். முன்பு பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் இடமாக இக்குளம் இருந்து வந்தது. 300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இக்குளத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. குறிப்பாக, பழநி நகரின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

இருப்பினும், நகர் பகுதியில் உள்ள அனைத்து கழிவுகளும் இக்குளத்துக்குள் விடப்படுவதால் கழிவுநீர் குளமாக மாறி வருகிறது. தற்போது குளமே தெரியாத அளவுக்கு அமலைச் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. ஆன்மிக நகரான பழநிக்கு விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.

பழநியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் படகு சவாரி தொடங்கப்பட்டு, அத்திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் படகு சவாரி தொடங்க வேண்டும் என்று பக்தர்கள், சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் வையாபுரி குளத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விரைவில் படகு சவாரியும், குளத்தின் கரையோரம் மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வசதியாக தனிப்பாதையும் அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பழநி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான படகு சவாரி தொடங்குவதற்கான திட்டம் தயாரித்து வருகிறோம். விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in