

தென்காசி: குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழைக் காலத்தில் சாரல் மழை பெய்யும். சாரல் சீஸனில் அருவிகளில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
வனப்பகுதி என்பதால் குற்றால த்தில் ஏராளமான குரங்குகள் உள்ளன. குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு தாங்கள் கொண்டுவரும் உணவுகளை அளிக்கின்றனர். மேலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் ஏராளமானோர் குரங்குகளுக்கு உணவு அளிக்கின்றனர். அத்துடன் குற்றாலத்தில் ஏராளமானோர் கிளிகளை வைத்து ஜோதிடம் கூறுகின்றனர்.
இதுபோன்ற செயல்களுக்கு தடை விதித்து, வனத்துறையினர் குற்றாலத்தில் எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “குற்றாலத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் குரங்குகளுக்கு உணவு அளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளால் இப்பகுதியில் உள்ள குரங்குகள் இயற்கையாக உணவு தேடும் பழக்கத்தை விட்டு மனிதர்கள் அளிக்கும் உணவுக்காக அலைந்து திரிகின்றன.
மேலும், சுற்றுலாப் பயணிகள் வைத்திருக்கும் பைகளை பறித்துச் செல்கின்றன. குழந்தைகள் வைத்திருக்கும் தின்பண்டங்கள் போன்றவற்றை பறித்துக்கொண்டு செல்கின்றன. இது போன்ற சந்தர்ப்பங்களில் குரங்குகளால் சுற்றுலா பயணிகள், குழந்தைகள் காயமடையும் சம்பவங்களும் அடிக்கடி ஏற்படுகின்றன.
மேலும், குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாத காலங்களில் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் இரை தேடி குரங்குகள் அலைகின்றன. வன விலங்குகள் அவற்றின் இயல்பிலேயே இருப்பதுதான் சிறந்தது. அவற்றுக்கு உதவி செய்வதாக கருதி உணவு அளிப்பது தவறானது.
வன உயிரினங்களுக்கு உணவு அளிப்பது, இடையூறு செய்வது, வியாபார நோக்கில் பயன்படுத்துவது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.