

சேலம்: ஏற்காட்டில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவுவதால், உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் தவித்து வருகின்றனர்.
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில், கோடையிலும் இதமான குளிர் இருக்கும். குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும். எனவே, ஆண்டு முழுவதும் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். தற்போது குளிர் காலம் என்பதால் சேலம் மாவட்டம் முழுவதும் பகல் நேரத்திலேயே குளிர் காற்று வீசுவதுடன், இரவில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், மலை மீது அமைந்துள்ள ஏற்காட்டில் குளிரின் தாக்கமும் பனி மூட்டமும் அதிகமாக இருக்கிறது. உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் குளிரைத் தாங்க முடியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஏற்காடு மக்கள் சிலர் கூறியது: தற்போது குளிர் காலம் என்றாலும் கூட, வழக்கத்தை விட குளிரின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. மாலை 4 மணிக்கே குளிர் காற்று வீசத்தொடங்கிவிடுகிறது. இரவில் நடுங்க வைக்கும் அளவுக்கு குளிர் நிலவுகிறது. காலையில் சூரிய வெளிச்சம் நன்கு பரவிய பின்னரே வெளியே நடமாட முடிகிறது.
குளிரைத் தாங்க முடியாமல், குழந்தைகள், வயதானவர்கள், சுற்றுலாப் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், பருகுவதற்கும், குளிப்பதற்கும் வெந்நீரையே பயன்படுத்துகிறோம். காலை 8 மணி வரை கடும் பனிமூட்டம் நிலவுவதால், இரு சக்கர வாகனங்களை இயக்க முடியாமலும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே செல்ல வேண்டிய நிலையும் உள்ளது, என்றனர்.