

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள வனச்சுற்றுலா தலங்களுக்கு ஒரே இடத்தில் மொத்த கட்டணத்தையும் செலுத்தும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
கொடைக்கானலில் மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட், பில்லர் ராக் ஆகிய சுற்றுலா தலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு சுற்றுலா தலத்தையும் சுற்றிப் பார்க்க நபர் ஒருவருக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.
விடுமுறை நாட்கள், சீசன் காலங்களில் நுழைவுச்சீட்டு வாங்குவதற்கே சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, அனைத்து வனச் சுற்றுலா தலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக கட்டணம் வசூலித்து ஒரே டிக்கெட் வழங்க திட்டமிட்டனர்.
அதன்படி, தற்போது பெரியவர்களுக்கு ரூ.30, குழந்தைகளுக்கு ரூ.15 நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் டிக்கெட்டை மோயர் சதுக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். அதனை மற்ற வனச்சுற்றுலா இடங்களில் காண்பித்து சுற்றிப் பார்க்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.