

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்துள்ள குயிலாப்பாளையத்தில் காணும் பொங்கலன்று மாரியம்மன் கோயில் திருவிழா மற்றும் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
கரோனா தொற்று காரணமாக இடையில் தடைபட்ட இவ்விழா, கடந்தாண்டு மிக எளிமையாக நடந்தது. இந்தாண்டு கரோனா தொற்று குறைந்ததால், நேற்று விமர்சையாக நடைபெற்றது. குயிலாப்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மன் கொண்டு வரப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
பின்னர் ஊர் எல்லையில் இருந்து காத்தவராய சுவாமி பரிவாரமூர்த்திகளுடன் ஊர்வலமாக வந்து கோயிலைச் சுற்றி, திடலுக்கு வந்தார். பின்னர் கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட மாடுகளை கோயில் திடலுக்கு அழைத்து வந்தனர். சுவாமிகள் திடலை அடைந்ததும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக எலுமிச்சை பழங்களையும், வாழைப் பழங்களையும் தூக்கி வீசினர்.
இதனை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்து பத்திரப்படுத்தினர். இப்பழங்களை அம்மன் வீசுவதாகவும், இதனை எடுத்துச் சென்றால் நல்லது நடக்கும் என்பதும் அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன் பின்னர் அம்மன் கோயில் முன்பு மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான இளைஞர்கள் மாடுகளை உற்சாகத்துடன் விரட்டிச் சென்றனர். மாடுகளின் கொம்புகளில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்களின் படங்கள் கட்டப்பட்டிருந்தன. மஞ்சு விரட்டை பார்ப்பதற்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோரும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் குயிலாபாளையத்தில் குவிந்திருந்தனர்.
இளைஞர்களும், யுவதிகளும் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வலம் வந்தனர். வெளிநாட்டினர் சிலர் தமிழ் பாரம்பரிய பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் விழா என்பதால் இம்முறை மஞ்சு விரட்டை காண அதிகளவில் வெளிநாட்டவர் குவிந்தனர்.