ஏற்காடு, மேட்டூர், கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

ஏற்காடு, மேட்டூர், கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்
Updated on
1 min read

சேலம் / நாமக்கல்: பொங்கல் விழாவின் இறுதி நாளான நேற்று, ஏற்காடு, மேட்டூர், குரும்பப்பட்டி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்.

காணும் பொங்கல் பண்டிகையான நேற்று, விளையாட்டு, கேளிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட கிராமங்களில், பொங்கல் விழா நண்பர்கள் குழு சார்பில் குழந்தைகளுக்கான ஓட்டம், கபடி, பலூன் உடைத்தல், இசை நாற்காலி, சாக்குப் பை ஓட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சிறுவர், சிறுமியருக்கு பரிசு வழங்கி, விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தினர்.

பாரம்பரிய நடனம், பாடல், நாட்டுப்புற கலைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. திரையரங்குகளில் கூட்டம் நிரம்பியிருந்தது. ஏற்காடு படகுத் துறையில் குடும்பம் குடும்பமாக படகுப் பயணம் சென்று மகிழ்ந்தனர். மான்பூங்கா, அண்ணாபூங்கா, ரோஸ் கார்டன், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட், பொட்டானிக்கல் கார்டன், சேர்வராயன் மலைக் கோயில் உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமிருந்தது.

மேட்டூரில் அணை முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக் கடன் செய்து, பொதுமக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். அணைப் பூங்காவிலும் கூட்டம் இருந்தது. அங்கு பார்வையாளர் கட்டணமாக ரூ.41,905 வசூலானது. மீன் கடைகளில் வியாபாரம் களைகட்டியது. அதேபோல, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, முட்டல் ஏரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் இருந்தது. சுற்றுலாத் தலங்களில் மாநகர காவல் ஆணையர் நஜ்முல்ஹோடா தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கொல்லிமலையில் உற்சாகம்: இதுபோல, நாமக்கல் கோட்டை, கொல்லிமலை, பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையம் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்தவர்கள் குழுக்களாக அமர்ந்து உணவு உண்டும், விளையாடியும் பொழுதைக் கழித்தனர்.

கொல்லிமலையில் நிலவிய சீதோஷ்ண நிலை பயணிகளைக் கவர்ந்தது. மேலும், அங்குள்ள ஆகாய கங்கை மற்றும் மாசிலா அருவிகளில் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

இறைச்சிக் கடைகளில் கூட்டம்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள இறைச்சிச் கடைகளில் மக்கள் நேற்று காலை முதல் ஆர்வத்துடன் இறைச்சியை வாங்கினர். இதனால், இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது. ஆட்டிறைச்சியின் விலை மற்ற நாட்களை விட கூடுதலாக இருந்தபோதும் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

இதுபோல, மீன் இறைச்சிக் கடைகளில் அதன் ரகத்துக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் விழா நண்பர்கள் குழு சார்பில் குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in