

நாகர்கோவில்: காணும் பொங்கலை முன்னிட்டு தென்மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களிலும், தாமிரபரணி கரையோரங்களிலும் பொதுமக்கள் திரண்டு உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடினர்.
திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையம், பாளையங்கோட்டை வ.உ.சி. பூங்கா, களக்காடு தலையணை, அகஸ்தியர் அருவி, பாபநாசம் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயில், கடனா, ராமநதி அணைப் பகுதிகளிலும், குற்றாலம்அருவிகளிலும், தாமிரபரணி கரையோரப் பகுதிகளிலும் குடும்பம் குடும்பமாக மக்கள் திரண்டு, தாங்கள் கொண்டு வந்த உணவுப் பதார்த்தங்களை உண்டு மகிழ்ந்தனர்.
பொங்கலையொட்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்ததால் கடைவீதிகள் வெறிச்சோடியிருந்தன. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் உள்ள முத்துநகர் கடற்கரையில் நேற்று மாலையில் மக்கள் கூட்டம், கூட்டாக வந்து காணும் பொங்கலை கொண்டாடினர். மதியம் வரை கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மாலையில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதேபோல், முயல்தீவு கடற்கரை, புதிய துறைமுக கடற்கரை, ரோச் பூங்கா ஆகிய கடற்கரை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
தூத்துக்குடி நகரின் பிரதான பூங்காவான ராஜாஜி பூங்கா மற்றும் மாநகரில் உள்ள நேரு பூங்கா, எம்ஜிஆர் பூங்கா, விவிடி பூங்கா, சங்கரநாராயணன் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள படகு குழாம் உள்ளிட்ட அனைத்து பூங்காக்களிலும் மாலை 3 மணிக்கு மேல் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், மணப்பாடு கடற்கரையிலும் மக்கள் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது. அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில், தேரிக்காடு, தாமிரபரணி கரையோர பகுதிகள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூடி காணும் பொங்கலை கொண்டாடினர்.
பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாக விளங்கும் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் ஆண்டுதோறும் காணும் பொங்கலை கொண்டாட ஏராளமான மக்கள் வருவது வழககம். கரோனா பரவல் காரணமாக இங்கு கடந்த 2 ஆண்டுகளாக காணும் பொங்கல் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்தாண்டு நேற்று காலையில் காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் வீரச்சக்க தேவி ஆலயக் குழு சார்பில் மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன் தலைமையில் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி காலை வீரசக்கதேவி ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. மாடுகளுக்கு கோ பூஜை நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து வீரசக்கதேவி ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை நடந்தது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாவட்ட இசைப் பள்ளி சார்பில் காலை முதல் மாலை 5 மணி வரை பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி மற்றும் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்திருந்து தாங்கள் கொண்டு வந்த உணவை அருந்தினர். கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சுதந்திரப் போர் புகைப்படங்களை ஆர்வமுடன் பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகளுக்கு பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சித் தலைவர் கமலாதேவி யோகராஜ், வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி, செயலாளர் செந்தில், பொருளாளர் சுப்புராஜ் சவுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முத்துராமன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.