

கோவை: தமிழகத்தில் ஆன்மிக சுற்றுலா அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று (ஜன.14) கோவைக்கு வந்தார். காந்திபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஹோட்டல், வாலாங்குளம் படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுப் பணி மேற்கொண்டார். அவருடன் சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் உள்ளிட்டோரும் ஆய்வு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
ஆய்வுப் பணிகளுக்கு பின்னர் அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: "முதல்வர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தமிழகத்தை இந்தியாவில் முதல் இடத்துக்கு கொண்டு வந்துள்ளார். சுற்றுலா துறையை பொறுத்தவரை, தமிழ்நாடு அளவுக்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் கிடையாது. தமிழகத்தில் கோயில்கள் அதிகம் உள்ள காரணத்தால் ஆன்மிக சுற்றுலா அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முன்னோர்கள் கட்டிய கலை நுணுக்கங்கள் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. நான் சுற்றுலாத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஒரு மாத காலங்களில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.
குறிப்பாக, உதகையில் உள்ள படகு இல்லங்களில் கூடுதல் வசதிகளை செய்வதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தனியாருக்கு நிகராக தமிழ்நாடு ஹோட்டல்களை தர உயர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி மேற்கொள்ளப்பட்ட குளங்களில், வாலாங்குளத்தில் இருக்கின்ற படகு இல்லத்தில் அதிவேக படகுகள் செலுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி மேற்கொள்ளப்பட்ட இடங்களில் வாகன நிறுத்தம் வசதி குறைவாக உள்ளது. அதனை மேம்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் கடந்த ஆண்டு 12 லட்சம் அயல் நாட்டவர்களும், 11 கோடி உள்ளூர் மக்களும் சுற்றுலாவிற்காக வந்துள்ளனர். தமிழகம் இதிலும் முதலிடத்தில் உள்ளது.
பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் ஒரு நபருக்கு ரூ.1500 தான் வசூலிக்கப்படுவதாகவும், ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது என்ற தகவல் தவறானது. உதகை படகு இல்லத்தை விட கோவையில் உள்ள படகு இல்லங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறுகிறீர்கள். இரண்டு இடங்களிலும் ஒரே கட்டணமாக இருந்தாலும் கோவையில் அதிக நேரம் ஒதுக்கப்படுகிறது. வேளாண்மைப் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த புகார் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்று அவர் கூறினார்.