

உதகை: உதகை படகு இல்லத்தில் ரூ.11 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மிதவை மேடை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
உதகை படகு இல்லத்தில் 33 மோட்டார் படகுகள், 17 துடுப்பு படகுகள், 104 கால்மிதி படகுகள் மற்றும் அவசர தேவைக்கான பாதுகாப்பு படகுகள் உள்ளன. இங்கு வார நாட்களில் சுமார் 5 ஆயிரம் பேரும், வார இறுதி நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேரும் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் உதகை படகு இல்லத்தில் ரூ.11 லட்சம் மதிப்பில் மிதவை மேடை அமைக்கப்பட்டுள்ளது. புளோட்டிங் ஜெட்டிஎனப்படும் மிதவை மேடை, செவ்வக வடிவில் சிறு, சிறு அமைப்பாக சேர்த்து ஒருசேர உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் இதில் நடந்து சென்று செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மிதவை மேடையில் இருந்தபடி ஏரியின் அழகை ரசித்துச் செல்கின்றனர். இதேபோல படகு இல்லத்தில் சாகச சூழல் சுற்றுலா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.