

உதகை: தொட்டபெட்டா முதல் வேலிவியூ வரை ரோப் கார் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு ஆண்டுதோறும் 30 லட்சம் முதல் 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் ரசித்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், உதகையில் புதிதாக சுற்றுலா தலங்கள், கேளிக்கை பூங்காக்கள், சாகச விளையாட்டுகளை அறிமுகம் செய்ய வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக உதகையில் ரோப் கார் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த ஆய்வுப் பணிகளை சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மேற்கொண்ட நிலையில், தற்போது வரை இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், உதகை தொட்டபெட்டாவில் இருந்து வேலிவியூ வரை 7 கிலோ மீட்டருக்கு ரோப் கார் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் உதகையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் தொட்டபெட்டாவில் இருந்து வேலிவியூ பகுதி வரை ரோப் கார் திட்டம் செயல்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
உதகை நகரில் உள்ள படகு இல்லம் உட்பட பல்வேறு பகுதிகளில் சாகச விளையாட்டுகளை அறிமுகம் செய்யவும், சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொட்டபெட்டா சிகரத்தில் நவீன தொலை நோக்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.