

உதகை: நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தேயிலை, சுற்றுலா திகழ்கிறது. நாட்டில் காஷ்மீரை அடுத்து அனைவரையும் ஈர்த்த சுற்றுலா தலம் நீலகிரி. இதனால் ஏழைகளின் காஷ்மீர் என உதகை அழைக்கப்படுகிறது.
காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்கியதால், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. குறிப்பாக கோடை காலத்தில் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும், இரண்டாம் சீசனான செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேனிலவு ஜோடிகள் மற்றும் வெளிநாட்டினரும் அதிக அளவில் வருவர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பிரசித்தி பெற்ற உதகை தாவரவியல் பூங்காவை கண்டு ரசிக்காமல் திரும்புவதில்லை. உதகை தாவரவியல் பூங்காவின் நுழைவுச்சீட்டு விற்பனையைக் கொண்டு, சுற்றுலா பயணிகளின் வருகை கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கரோனா தொற்று பரவலால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
கரோனா கட்டுப்பாடுகளால் 2020, 2021-ம் ஆண்டுகளில் பெரும்பாலான நாட்கள் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன. ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் நிலையில், 2021-ம் ஆண்டு வெறும் 5 லட்சத்து 3,545 சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்தனர்.
இந்நிலையில், கரோனா பரவல் குறைந்ததையடுத்து, கடந்த ஆண்டு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் வருகை மெல்ல அதிகரித்தது. இதனால், 2022-ம் ஆண்டில் 24 லட்சத்து 12 ஆயிரத்து 483 பேர் வந்துள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்திருந்தனர். இந்த 8 நாட்களில் மட்டும் உதகை தாவரவியல் பூங்காவுக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 258 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: அமியூஸ்மெண்ட் பார்க், 3டி முதல் 5டி திரையரங்குகள், மால்கள் என பல வடிவங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் வந்துள்ளதால், அவற்றை நாடி மக்கள் செல்கின்றனர். அதேசமயம், நீலகிரி மாவட்டம் சிறந்த சுற்றுலா தலமாக அறியப்பட்டாலும், கடந்த 50 ஆண்டுகளாக புதிதாக சுற்றுலா தலங்கள் உருவாக்கப்படவில்லை. இதில் ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம் மட்டும் விதிவிலக்கு.
நீலகிரி மாவட்டத்தின் சாலைகள் குறுகலாகவும், வாகனங்கள் நிறுத்த இடங்கள் இல்லாததாலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிருப்தியடைகின்றனர். சுற்றுலா பயணிகளை கவர கேபிள் கார் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டு, பல முறை ஆய்வுகளும் நடத்தப்பட்டன. ஆனால், இதுவரை அந்த திட்டம் கிடப்பிலேயே உள்ளது. கேபிள் கார் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என்றனர்.