

நாகர்கோவில்: பொங்கல் விடுமுறையின் போது 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் கூடுதலாக 4 மணி நேரம் படகு போக்குவரத்து நடைபெறும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு 11,000 சுற்றுலா பயணிகள் வரை படகில் பயணம் செய்து பார்வையிடுகின்றனர். இதன் அருகே மற்றொரு பாறையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணி நடைபெற்று வந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகையின்போது அங்கும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. விவேகானந்தர் பாறைக்கு தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளியின்றி படகுகள் இயக்கப்படுகின்றன. வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகையன்று தொடங்கி 17ம் தேதி வரை தொடர் விடுமுறையில் கன்னியாகுமரியில் கூட்டம் அலைமோதும்.
அன்று சபரிமலையில் மகரவிளக்கு முடிந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரி வருவர். கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கூடுதலாக 4 மணி நேரம் படகுகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி காலை 8 மணிக்கு பதில் 2 மணி நேரம் முன்னதாக காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கும். மாலை 4 மணிக்கு பதிலாக 6 மணி வரை நீட்டிக்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.