

சென்னை: தமிழகத்தில் மலைப் பிரதேசங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் 6 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 2-ம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக, 3, 4, 5 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில்வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
தமிழகத்தில் பதிவான குறைந்தபட்ட வெப்பநிலை (குளிர்) அளவுகளின்படி மலைப் பிரதேசங்களான கொடைக்கானலில் 6.1 டிகிரி,ஊட்டியில் 6.2 டிகிரி, குன்னூரில்10 டிகிரி, ஏற்காட்டில் 13 டிகிரிசெல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. நிலப்பகுதிகளான சேலத்தில் 16.6 டிகிரி, தருமபுரியில் 17 டிகிரி, வேலூரில் 19 டிகிரி, கோவையில் 19.5 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று அதிகாலை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகளவு காணப்பட்டது. இதனால், சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.