Rewind 2022 | 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா - மத்திய சுற்றுலாத் துறை செய்தது என்ன?

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

புதுடெல்லி: சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், முதன் முறையாக 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் - ஓர் பார்வை:

2022 டிசம்பர் 1ம் தேதி இந்தியா ஜி-20 நாடுகளின் தலைமைப்பொறுப்பை ஏற்றது. இந்த தலைமைப்பொறுப்பு 2023ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், நாடு முழுவதும் 55 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட ஜி-20 நாடுகள் சார்ந்த கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதைத் தவிர, மத்திய சுற்றுலாத்துறையின் சார்பில் நான்கு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதை முன்னிட்டு சுற்றுலாத் துறை சார்பில் உள்நாட்டு அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்தியா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கார் ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகளுக்கான ஓட்டுநர்கள், ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சிகளில் இதுவரை இரண்டு ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வெளிநாட்டினரின் மொழி, தனி நபர் சுகாதாரம், கொரோனா கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

மத்திய சுற்றுலாத்துறை, உள்துறை அமைச்சகம், காவலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து 2022 அக்டோபர் 19ம் தேதி புதுடெல்லியில் தேசிய அளவிலான காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டை நடத்தியது. இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சமச்சீர் சுற்றுலா காவல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆர்சிஎஸ் உடான் திட்டம்: ஆர்சிஎஸ் உடான் திட்டம் 3.0-ன் கீழ் மத்திய விமானப்போக்குவரத்துத் துறையுடன் இணைந்து சுற்றுலா வழித்தடங்களில் சிறப்பான விமானச் சேவையை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 31 சுற்றுலா வழித்தடங்களில் விமானச் சேவை இயக்கப்பட்டுள்ளது. மேலும் 28 புதிய சுற்றுலா வழித்தடங்களில் விமானச் சேவையைத் தொடங்க கொள்கை ரீதியிலான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுலாத்துறையின் சார்பில் வடகிழக்கு மண்டலத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான சர்வதேச சுற்றுலா மார்ட் (Mart) நடத்தப்பட்டது. 2022 நவம்பர் 17 ம் தேதி முதல் 19ம் தேதிவரை மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற இந்த 10-வது சர்வதேச சுற்றுலா மார்ட் வடகிழக்கு மண்டலத்தைச்சேர்ந்த 8 மாநிலங்களின் சுற்றுலாத் நிறுவனங்களையும், தொழில் முனைவோரையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்தது.

இமாச்சலப் பிரதேசத்தில் தரம்சாலாவில் 2022 செப்டம்பர் 18 முதல் 20ம் தேதி வரை மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் மாநில சுற்றுலா அமைச்சர்கள் பங்கேற்ற தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில சுற்றுலா அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், சுற்றுலாத்துறை சார்ந்த விருந்தோம்பல் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் சுற்றுலா சார்ந்த கொள்கை மற்றும் திட்டங்கள் குறித்தும், இமயமலைப்பகுதியில் அமைந்த மாநிலங்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீக சுற்றுலா ஆகியவற்றின் மேம்பாடு குறித்தும் ஜி-20 சார்ந்த கூட்டங்களின் இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சர்வதேச யோகா தினம்: மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் 2022 ஜூன் 21ம் தேதி தெலங்கானாவில் சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி .கிஷன் ரெட்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், மத்திய மாநில அரசுகளின் உயரதிகாரிகள், சுற்றுலாதுறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், தனது அலுவலகங்கள் சார்பில் அரேபியன் டிராவல் மார்ட், துபாய் மற்றும் உலக டிராவல் மார்க்கெட் உள்ளிட்ட சர்வதேச சுற்றுலா கண்காட்சிகளில் பங்கேற்றதன் மூலம் இந்தியாவிற்கு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவர்ந்துள்ளது.

விடுதலையின் 75-வது அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, யுவா சுற்றுலா கிளப்-களை அமைக்க சுற்றுலா அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் இந்திய சுற்றுலாத் துறைக்கு பல இளம் தூதர்கள் கிடைத்துள்ளனர். மத்திய சுற்றுலாத் துறை சார்பில் விருந்தோம்பல் தொழில் சார்ந்த தேசிய ஒருங்கிணைந்த தகவல்கள் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை உள்ளடக்கிய இந்த டிஜிட்டல் தகவல் சேகரிப்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் எளிமையான முறையில் தொழில் செய்வதை ஊக்குவிக்கும். கரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும் பாதிப்பை சந்தித்த சுற்றுலாத் துறை சார்ந்த நிறுவனங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக வங்கிக்கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஆயிரம் சுற்றுலா முகவர்களுக்கும், 10 ஆயிரம் சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், முதன் முறையாக 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்ய 31.03.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in