

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நின்றுள்ளதால் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே 2000-ம் ஆண்டில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. உப்பு காற்றால் பாதிக்கப்பட்டு மெருகு குலையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை இச்சிலை மீது பூசப்படும். இறுதியாக கடந்த 2017ம் ஆண்டு ரசாயனக் கலவை பூசப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு ரசாயனக் கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கரோனா தொற்றால் இப்பணி தடைபட்டது.
இந்நிலையில் பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் திருவள்ளுவர் சிலைக்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து ரூ.1 கோடி திட்ட மதிப்பில் டெண்டர் விடப்பட்டு ரசாயன கலவை பூசும் பணி கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி துவங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ் இப்பணியை தொடங்கி வைத்தார். இப்பணியை நவம்பர் 1-ம் தேதிக்குள் முடித்து 2-ம் தேதி முதல் பொதுமக்கள் சிலையை பார்வையிட அனுமதிக்க திட்டமிடப்பட்டது.
பராமரிப்பு பணி தாமதம்: ஆனால், கன்னியாகுமரி கடலில் சூறைக்காற்று, மழை போன்றவற்றால் திட்டமிட்டவாறு பணிகளை முடிக்க முடியவில்லை. 140 அடி உயரம் வரை இரும்பு சாரம் அமைத்து சிலையில் உள்ள உப்புபடிவங்களை அகற்றுவதற்கான காகிதக்கூழ் ஒட்டும் பணி, சிலை இணைப்புகளை கருப்புக்கட்டி, சுண்ணாம்பு போன்ற கலவைகளால் பலப்படுத்தும் பணிகள் நடந்தன.
கடந்த மாதமும், இம்மாத தொடக்கத்திலும் பெய்த தொடர் மழையால் சிலையின் மேல் ஒட்டப்பட்டிருந்த காகிதங்கள் நனைந்து அகன்று விட்டன. இதனால் மழை நின்ற பின்னர் காகிதம் ஒட்டப்பட்டு உப்பு படிவத் தன்மை குறைந்துள்ளதா என உறுதி செய்யப்பட்ட பின்னரே ரசாயன கலவை பூச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் மழை நின்று கடும் வெயில் அடித்து வருவதால் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது சிலையின் மீது படிந்துள்ள வெளிறிய உப்பு படிவங்களை முழுமையாக அகற்றி இயற்கையான அமைப்பை கொண்டு வரும் வகையில் காகிதக்கூழ் பூசும் பணி நடக்கிறது. இப்பணியை டிசம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னரே சிலையின் மேல் சிலிக்கான் ரசாயன கலவை பூசும் பணி நடைபெறும்.
எனவே, திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி 2023 ஜனவரியில் தான் நிறைவு பெறும். அதன் பின்னரே சுற்றுலா பயணிகள் சிலையை பார்வையிட அனுமதிக்க வாய்ப்பு உள்ளது என சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரம் இடையில் மழை பெய்தால் பணி முடிய மேலும் தாமதமாக வாய்ப்புள்ளது.