

சிம்லா: கரோனா தொற்று குறைந்ததால் இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த மாநிலத்தில் உள்ள சிம்லா, குலு, மணாலி உள்ளிட்ட கோடை வாசஸ் தலங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. ஆனால் 2020, 2021-ம் ஆண்டுகளில் கரோனா பிரச்சினை இருந்ததால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ளோரின் வாழ்வாதாரத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது கரோனா பெருந்தொற்று பிரச்சினை குறைந்துள்ளதையடுத்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 1.28 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதில் 28,232 வெளிநாட்டுப் பயணிகளும் அடக்கம் என்று இமாச்சல் மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 41.03 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இமாச்சலுக்கு வருகை தந்திருந்தனர்.
இந்த ஆண்டில் முதல் 10 மாதத்தில் 1.28 கோடி பேர் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும். சிம்லா, குலு, மணாலி, லாஹவுல் அன்ட் ஸ்பிதி மாவட்டங்கள், அடல் மலை சுரங்கப்பாதை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். குலு, லாஹவுல் அன்ட் ஸ்பிதி பகுதிகளுக்கு 30.4 லட்சம் பேர் வந்துள்ளனர்.
இதுகுறித்து இமாச்சல் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநரும், சுற்றுலாத்துறை இயக்குநருமான அமித் காஷ்யப் கூறும்போது, “கரோனாவால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது உண்மைதான். ஆனால் தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. தற்போது அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குஜராத்திலிருந்து அதிக அளவில் மக்கள் இங்கு வருகின்றனர்” என்றார்.
சிம்லா, குலு சுற்றுலாத் தலங்களைப் போலவே மணாலிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம். இங்கு வரும் டிசம்பர் 20 முதல் ஜனவரி 10 வரை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவர் என்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இங்குள்ள சோலங்க் பகுதியில் நடத்தப்படும் கோண்டாலாஸ் விளையாட்டு, ஹம்டா பகுதியில் இக்லூ என்று அழைக்கப்படும் பனிவீடு, மணாலியில் நடைபெறும் குளிர்கால விளையாட்டுகள் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு விழும் பனிப்பொழிவை ரசிக்கவும் மக்கள் அதிகம் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019-ல் இங்கு 1.72 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். 2020-ல் இது 32.13 லட்சமாகக் குறைந்தது. 2021-ல் 56.37 லட்சம் பேர் மட்டுமே வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ