தரங்கம்பாடியில் டேனிஷ் கவர்னர் மாளிகை மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்படுமா?

தரங்கம்பாடியில் டேனிஷ் கவர்னர் மாளிகை மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்படுமா?
Updated on
2 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள வரலாற்று அடையாளமான டேனிஷ் கவர்னர் மாளிகை, பல ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சிதிலம

கி.பி.18-ம் நூற்றாண்டில் டென்மார்க் நாட்டினருக்கான முக்கிய வணிக நகராக விளங்கிய தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை, துறைமுகம், தேவாலயங்கள், மாளிகைகள் என பல வகையான கட்டிடங்களை டென்மார்க் நாட்டினர் கட்டினர். இந்தியாவில் டென்மார்க் நாட்டின் வணிகத்தை கவனித்துக் கொண்ட கவர்னர்கள் தங்குவதற்குகாக கி.பி.1784-ம் ஆண்டு கலைநயத்துடன் டேனிஷ் கவர்னர் மாளிகை, தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ் கோட்டைக்கு எதிர்புறம் கட்டப்பட்டது. இதில் டேனிஷ் கவர்னர்கள் 34 பேர் தொடர்ச்சியாக தங்கியுள்ளனர்.

உயரமான தூண்கள்- மேற்கூரை, அறைகளுடன் வெள்ளை நிறத்தில் கம்பீரமான தோற்றத்துடன் கட்டப்பட்ட இந்த மாளிகை காலப்போக்கில் சிதிலமடைந்தது. தமிழக அரசின் சுற்றுலாத் துறை, இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் டென்மார்க் நாட்டின் தேசிய அருங்காட்சியகம் 228 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மாளிகையை பழமை மாறாமல் புதுப்பிக்க முன்வந்தது.

டெல்லியைச் சேர்ந்த இந்திய கலை மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அறக்கட்டளை(இண்டாக்) 2009-ம் ஆண்டு ரூ.87 லட்சத்தில் டென்மார்க் கட்டிடக் கலை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, புதுப்பிப்புப் பணியை மேற்கொண்டது. பின்னர், 2012, செப்டம்பர் மாதம் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, காணொலிக் காட்சி மூலம் புதுப்பிக்கப்பட்ட டேனிஷ் கவர்னர் மாளிகையைத் திறந்து வைத்தார்.

அப்போது, புதுப் பொலிவுடன் காட்சியளித்த கவர்னர் மாளிகை, பூட்டியே கிடப்பதாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும், பாசி படிந்து கறைகளுடன் தற்போது பொலிவின்றி காணப்படுகிறது. மாளிகையின் உள்ளே குப்பை, தூசு நிறைந்து, சிதிலமடையும் நிலையில் காணப்படுகிறது. மேற்கூரையின் ஒரு பகுதி சேதமடைந்து முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த மாளிகை, தற்போது தமிழக தொல்லியல் துறை வசம் உள்ளது. இதைச் சீரமைத்து மீண்டும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் வகையில் திறக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலரும், ‘தரங்கம்பாடியின் பழைய நினைவுகள்’ என்ற நூலின் ஆசிரியருமான எம்.ஏ.சுல்தான், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

டேனிஷ் கவர்னர் மாளிகை புதுப்பிக்கப்பட்டு 2012-ல் திறக்கப்பட்டாலும், பூட்டி வைக்கப்பட்டு சில ஆண்டுகளுப் பிறகுதான் மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. மாளிகைக்குள் அருங்காட்சியகம், நூலகம் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படாமல், திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே பல்வேறு காரணங்களால் மீண்டும் பூட்டப்பட்டது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தரங்கம்பாடிக்கு நாள்தோறும் வெளிநாடுகள் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவர்னர் மாளிகையைப் பார்வையிட முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருத்தத்துடன் செல்கின்றனர். மிகுந்த செலவழித்து புதுப்பிக்கப்பட்ட மாளிகையை, பூட்டி வைத்து சிதிலமடையச் செய்வது வேதனையளிக்கிறது. இதை உடனடியாக சீரமைத்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பார்வைக்கு திறக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in