Published : 24 Oct 2022 04:10 AM
Last Updated : 24 Oct 2022 04:10 AM

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கேரள மக்கள் வருகை அதிகரிப்பு

திண்டுக்கல்

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. குறிப்பாக, கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் சுற்றுலாத் தலங்களில் காணப்பட்டனர்.

கொடைக்கானலில் வாரந்தோறும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். கடந்த 2 வாரங்களாக மலைப்பகுதியில் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருந்தது.

இந்நிலையில், சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். குறிப்பாக கேரள மாநில பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

இவர்கள் மோயர் சதுக்கம், பைன் மரக் காடுகள், தூண் பாறை, குணா குகை, பிரையண்ட் பூங்கா உள்ளிட்டவற்றை பார்த்து மகிழ்ந்தனர். மேகக் கூட்டங்கள் இறங்கி வந்து தழுவிச் சென்றதால், இயற்கை எழிலை வெகுவாக ரசித்தனர். நட்சத்திர ஏரியில் பலர் படகு சவாரி , ஏரிச் சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கடந்த 2 வாரங்களுக்கு பிறகு, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களில் அதிகபட்சமாக பகலில் 19 டிகிரி செல்சியசும், இரவில் குறைந்த பட்சம் 12 டிகிரி செல்சியசும் வெப்ப நிலை நிலவியது.

காற்றில் ஈரப்பதம் 70 சதவீதமாக இருந்ததால் பகலில் இதமான தட்பவெப்பம் நிலவியது. இரவில் அதிக குளிர் உணரப்பட்டது. கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் புல்வெளிகளில் உறை பனி படர்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x