

உதகை மலை ரயிலின் 115-வது ஆண்டு தினத்தையொட்டி, பாரம்பரிய ரயில் அறக்கட்டளை சார்பில் உதகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்ட சுற்றுலாவில் முக்கிய அங்கம் வகிப்பது உதகை மலை ரயில். நாட்டிலேயே பல் சக்கரம் கொண்ட ஒரே ரயில் பாதையான இது, 1898-ம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை நிறுவப்பட்டது. பின்னர், 1908-ம் ஆண்டு உதகை வரை இப்பாதை நீட்டிக்கப்பட்டது.
நூற்றாண்டை கடந்த மலை ரயிலுக்கு, 2005-ம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது. நூறு ஆண்டுகளை கடந்து இயங்கும் நீலகிரி மலை ரயில், உலக சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்டுள்ளது.
உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்படும் நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட மலை ரயிலில் பயணிப்பர். குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே 16 முதல் வகுப்பு, 92 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கைகள், 30 சாதாரண இருக்கைகளை உள்ளடக்கிய மூன்று பெட்டிகளுடன் ரயில் இயக்கப்படுகிறது.
குன்னூர் - உதகை இடையே 16 முதல் வகுப்பு, 19 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இருக்கைகள், 150 சாதாரண இருக்கைகளை உள்ளடக்கிய ஐந்து பெட்டிகளுடன் டீசல் ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், மலை ரயிலின் 115-வது ஆண்டு தின விழா, உதகை ரயில் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
நீலகிரி மலை ரயில் அறக்கட்டளை நிறுவனர் நட்ராஜ் தலைமையிலான நிர்வாகிகள், மலை ரயில் உதகைக்கு வந்தவுடன் ஓட்டுநர், சுற்றுலாப் பயணிகளை மாலை அணிவித்து வரவேற்றனர். இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி, மலை ரயிலின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.