கொடைக்கானல் | சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க அஞ்சு வீடு அருவி வழிகாட்டி பலகை அகற்றம்

கொடைக்கானல் | சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க அஞ்சு வீடு அருவி வழிகாட்டி பலகை அகற்றம்
Updated on
1 min read

கொடைக்கானலில் மாணவர் உயிரிழந்ததை அடுத்து அஞ்சு வீடு அருவிக்கு செல்லும் வழிகாட்டி அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது.

கொடைக்கானலில் டால்பின் நோஸ், புல்லாவெளி நீர்வீழ்ச்சி, அஞ்சு வீடு அருவி ஆபத்து மிகுந்த சுற்றுலா இடங்களாக உள்ளன. இருந்தும், இங்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கவில்லை. இதனால், இந்த இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து உயிரிழப்பதும் நடக்கிறது.

பேத்துப்பாறை அருகேயுள்ள அஞ்சு வீடு அருவியில் சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர் தவறி விழுந்து இறந்தார். இதுவரை 9-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். எனவே அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சில மாதங்களுக்கு முன்பு அஞ்சு வீடு அருவியில் பாதுகாப்பு வசதி ஏற்படுத்துவது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

ஆனால், தற்போது வரை எவ்வித பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தவில்லை. கொடைக்கானலில் 2-வது சீசன் தொடங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள், அஞ்சு வீடு அருவிக்கு செல்வதை தடுக்க அருவிக்கு செல்லும் வழிகாட்டி அறிவிப்பு பலகை அகற்றப்பட்டு உள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வருவாய்த்துறை நிலத்தில் அருவி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் இல்லாததால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்க முடியாது.

அருவியை தொலைவில் இருந்து பார்த்து ரசிக்காமல் கீழே சென்று பார்க்க நினைப்பதால் அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இருந்தும், பயணிகள் செல்வதை தடுக்க வழிகாட்டி பலகை மட்டும் நெடுஞ்சாலைத்துறை மூலம் அகற்றப்பட்டுள்ளது, என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in