

தாண்டிக்குடியில் நறுமணச் சுற்றுலா தல திட்டத்துக்குப் புத்துயிர் கொடுத்து சுற்றுலா மேம்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியில் காபிக்கு அடுத்தபடியாக மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், லவங்கம், ஏலக்காய் போன்ற நறுமணப் பயிர்கள் சாகுபடியாகின்றன.
காபி, நறுமணப் பயிர்கள் விளைவதால் அதற்கான ஆராய்ச்சி நிலையங்களும் உள்ளன. இது மட்டுமின்றி ஆரஞ்சு, பேரிக்காய், பிளம்ஸ், அவகோடா, மலை வாழை, சவ்சவ், பீட்ரூட், கேரட், பீன்ஸ், முள்ளங்கியும் சாகுபடியாகின்றன.
தாண்டிக்குடியில் மங்களம்கொம்பு, ஆடலூர், தடியன்குடிசை, அரசன்கொடை, பண்ணைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களும் இருக்கின்றன. வார விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
தாண்டிக்குடியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ‘நறுமணச் சுற்றுலா’ தலம் அமைக்கத் திட்டமிட்டு, தடியன்குடிசையில் இடம் தேர்வானது. 2006-ம் ஆண்டு மத்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து நறுமணச் சுற்றுலா தலத்தை ‘கிராமியச் சுற்றுலா’ தலம் என அறிவித்தன.
2012-ம் ஆண்டு பட்லங்காடு பகுதியில் ரூ.50 லட்சத்தில் காடுகளுக்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு குடில்கள் அமைக்கப்பட்டன. தற்போது போதிய பராமரிப்பின்றி உள்ளன. இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ஒரு சில தனியார் விடுதிகளில் மர வீடுகள், மரக்குடில்கள் போன்ற வசதிகள் உள்ளன.
நறுமணச் சுற்றுலா தலத்துக்கான அறிவிப்பு வெளியானதும் தாண்டிக்குடி, தடியன்குடிசையில் சுற்றுலாப் பயணிகளைக் கவர யானை சவாரி, பட்டாம்பூச்சிப் பூங்கா, மூலிகைப் பூங்கா, பாராகிளைடிங், பேர்டு வாட்சிங் (பறவைகளைக் காணுதல்), டிரக்கிங் (வனத்துக்குள் நடைப்பயிற்சி), பழங்குடி மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், காபி மற்றும் நறுமணப் பொருட்களின் விற்பனை மையங்கள் அமைத்தல் என பல கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் இத்திட்டங்கள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை. நறுமணச் சுற்றுலா தலம் மணம் வீசியிருந்தால் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக சர்வதேச சுற்றுலா தலமாக தாண்டிக்குடி தரம் உயர்ந்திருக்கும். இங்குள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமும் முன்னேறியிருக்கும்.
சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, ‘நறுமணச் சுற்றுலா’ திட்டத்தை மீண்டும் மத்திய அரசோ, மாநில அரசோ கையில் எடுக்க வேண்டும் என்பது தாண்டிக்குடி மக்களின் ஆசை.
தாண்டிக்குடியைச் சேர்ந்த இந்திய காபி வாரிய உறுப்பினர் பி.ஆர்.எம்.ரவிச்சந்திரன் கூறுகையில், இம்மலைப்பகுதியில் விளையும் காபி, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட சாகுபடி குறித்தும், பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை பற்றி சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்வதற்காக நறுமணச் சுற்றுலா திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் தங்கும் விடுதிகள் மட்டுமே கட்டப்பட்டன. அவைகளும் போதிய பராமரிப்பின்றி உள்ளன. நறுமணச் சுற்றுலா திட்டத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்தால் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இங்கு விளையும் பொருட்களைச் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்வதன் மூலம் விவசாயிகளும் பயனடைவர், என்றார்.
வனத்துறையினர் கூறுகையில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளைக் கவரவும் திட்டம் உள்ளது என்றனர்.