

திருப்பத்தூர் அருகேயுள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன.
திருப்பத்தூர் அருகே கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபர் மாதங்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகள் இனப்பெருக்கத்துக்காக ஆயிரக்கணக்கில் இங்கு வருவது வழக்கம். மீண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அந்தப் பறவைகள் குஞ்சுகளுடன் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிடும்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே அவ்வப்போது மழை பெய்து வருவதால், சரணாலயம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பசுமை போா்த்தியதுபோல் காணப்படுகிறது.
இதனால் சீசனுக்கு முன்பே ஜூலை மாதத்தில் இருந்து உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்திநாரை போன்ற வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கின.
தற்போது சீசன் தொடங்கியதை யடுத்து பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் கொள்ளுகுடிபட்டி வழியாக நீண்ட தூரம் சுற்றி சென்று பறவைகளை காண வேண்டிய நிலை இருந்தது.
தற்போது வனத்துறை அலுவலகம் வழியாகச் சென்று பறவைகளை காணும் வகையில், அதற்கு தேவையான வசதிகளை வனத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இது குறித்து கொள்ளுக்குடி பட்டி கிராம மக்கள் கூறியதாவது:
இந்த ஆண்டு எங்கள் பகுதியில் நல்ல மழைபெய்துள்ளது. இதுவரை பாம்புதாரா, நத்தை கொக்கி நாரை, மார்கழியன், கருநீல அரிவாள் மூக்கன் உள்ளிட்ட வகை பறவைகள் வந்துள்ளன.
அவை அச்சமின்றி வசிக்க வசதியாக வழக்கம்போல இந்த ஆண்டும் வெடி வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடப் போகிறோம் என்று கூறினர்.