சேலம் | மரங்கள் சூழ்ந்து மறைத்துள்ளதால் பொய் மானை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சேலம் பொய் மான் கரடு குகை மரங்களால் சூழ்ந்துள்ளதால், பொய் மானை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். படம்: வி.சீனிவாசன்.
சேலம் பொய் மான் கரடு குகை மரங்களால் சூழ்ந்துள்ளதால், பொய் மானை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். படம்: வி.சீனிவாசன்.
Updated on
1 min read

சேலத்தில் உள்ள பொய் மான் கரட்டில் உள்ள குகையை மரங்கள் சூழ்ந்து மறைத்துள்ளதால், பொய் மானை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி அருகே பொய் மான் கரடு அமைந்துள்ளது. சமவெளிப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி உள்ள மலையில் இரண்டு பாறைகளுக்கு இடையே உள்ள ஓரு குகையில் மான் இரு கொம்புகளுடன் இருப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது.

குகைக்கு அருகில் சென்று பார்த்தால் மான் இருக்காது. இது ஒரு பொய் தோற்றமாகும். புராண காலத்துடன் தொடர்புடைய பொய் மான் கரடு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் பகுதியாக விளங்கி வருகிறது.

ராமாயண காலத்தில், ராமனையும் சீதையையும் பிரிக்கும் எண்ணத்துடன் மானாக உருமாறிவந்தான் மாரீசன். மானைக் கண்ட சீதை அதைப் பிடித்துத் தருமாறு ராமனிடம் கேட்டதால், அவர் மானை விரட்டிச் சென்றார். அப்போது, மாரீசன் பொய் மானாக மாறி கரடு குகையில் நின்றான். ராமன் அம்பு எய்த முயற்சிக்கும்போது பொய் மான் என்பது தெரிந்து ஏமாற்றமடைந்தார், என புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இங்கு நடந்ததாக கூறப்படுவதால், பொய் மான் கரட்டைக் காண மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொய் மான் கரட்டை சுற்றுலாப் பயணிகள் தேசிய நெடுஞ்சாலையில் நின்று பார்க்க முடியும். கரடு குகையில் மான் நிற்பது போன்று தெரியும். ஆனால் அருகில் சென்றவுடன் மான் மறைந்து வெறும் குகை மட்டும் தென்படும்.

தற்போது, பொய் மான் கரடு குகை மரங்களால் சூழ்ந்துள்ளதால், பொய் மான் தோற்றத்தை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் புராண சிறப்பு மிக்க பொய் மான் கரட்டை சூழ்ந்துள்ள மரங்களில் உள்ள கிளைகளை வெட்டி அகற்றி, குகையில் உள்ள பொய் மானை சுற்றுலாப் பயணிகள் காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in