

போடி: மூணாறுக்கு சுற்றுலா செல்பவர்கள் மலைச் சாலைகளில் நினைத்த இடத்தில் வாகனங்களை நிறுத்துவதால் பேரிடரில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, வாகன நிறுத்தங்களை முறைப்படுத்தி கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இடுக்கி மாவட்டம் மூணாறில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் படகு சவாரி, நீர்வீழ்ச்சி, பூங்கா, மலையேற்றம் உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இருப்பினும் மூணாறு செல்லும் வழிநெடுகிலும் உள்ள மலைச் சாலைகளும் அங்குள்ள பள்ளத்தாக்கு, சாலையை மறைக்கும் மூடுபனி உள்ளிட்டவையும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாய் கவர்ந்து வருகிறது. இதனால் பலரும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்து வருகின்றனர்.
இதுபோன்று பலரும் வாகனங்களை நினைத்த இடத்தில் நிறுத்துவதால் பிற வண்டிகள் தடுமாறும் நிலை உள்ளது. மேலும் சுற்றுலா மனோநிலையில் தங்களை மறந்து சாலையின் குறுக்கே செல்வதால் விபத்து அபாயமும் ஏற்படுகிறது.
ஆகவே மலைச் சாலைகளில் வாகனங்களை நிறுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதன்படி பாதுகாப்பான பகுதிகளில் வாகனங்களை நிறுத்தவும், மற்ற இடங்களில் இதற்கு தடை விதித்தும் அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், "சமீபகாலமாக மலைச் சாலையில் நிலச்சரிவு பகுதிகள் அதிகரித்துள்ளன. இதை உணராமல் வாகனங்களை நிறுத்துவதால் பேரிடரில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே வாகன நிறுத்தங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன" என்றனர்.