

சென்னை: கரோனா பேரிடருக்குப் பிறகு தமிழக சுற்றுலாத் துறை தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் 11.52 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளனர்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியில் சுற்றுலாத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருசில நாடுகளில் கரோனா பேரிடர் பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத் துறை வீழ்ச்சி அடைந்து பொருளாதாரத்தில் பெரிய அளவில் சரிவைச் சந்தித்தன. அண்டை நாடான இலங்கை இதற்கு சரியான உதாரணமாகும்.
இந்நிலையில் கரோனா பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில், அனைத்து நாடுகளும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றன.
பயணிகளின் பங்கு முக்கியம்
சுற்றுலாப் பயணிகளின் வருகையை வைத்தே ஒரு நாட்டின் சுற்றுலாத் துறை வளர்ச்சி வெளிப்படும். அந்த வகையில், பல வகையான சுற்றுலாத் தலங்கள், பிரம்மாண்ட கோயில்கள், மலை வாசஸ்தலங்கள், வனங்கள், புல்வெளிகள் மற்றும் கடற்கரை போன்ற சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ள தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில், அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, மலேசியா, ஜெர்மனி, ரஷ்யா, இலங்கை மற்றும் வங்கதேசத்தினரின் பங்கு முக்கியமாக உள்ளது.
வருங்காலங்களில், பாரம்பரியம் மற்றும் ஆன்மிக சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, சாகச சுற்றுலா, சுற்றுச்சூழல் மற்றும் வனச் சுற்றுலா, மருத்துவம் மற்றும் உடல்நலம் பேணும் சுற்றுலா, உணவு சுற்றுலா உட்பட 10 சுற்றுலா பிரிவுகளை, தமிழக சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு சுற்றுலாத் துறை அடையாளம் கண்டுள்ளது.
புத்துணர்ச்சி பெறுகிறது
கரோனா பேரிடர் காரணமாக உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சுற்றுலாவை நம்பி இருந்த ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். தற்போது, தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், சுற்றுலாத் துறை புத்துணர்ச்சி பெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்துக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
2017-ம் ஆண்டு 34.99 கோடி உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தனர். தொடர்ந்து, 2018-ம் ஆண்டில் 39.19 கோடி, 2019-ம் ஆண்டில் 50.17 கோடி, 2020-ம் ஆண்டில் கரோனாவால் சற்று சரிவை சந்தித்து, 14.18 கோடி,2021-ம் ஆண்டில் 11.54 கோடி என தமிழகத்துக்கு சுற்றுலாப் பய ணிகள் வருகை புரிந்துள்ளனர்.
இந்நிலையில், நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 1,03,55,647 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 6,413 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் என 1 கோடியே 3 லட்சத்து 62 ஆயிரத்து 60 பேர் வருகை தந்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் 1,25,81,706 பேரும், மார்ச் மாதத்தில் 1,56,16,991 பேரும், ஏப்ரல் மாதத்தில் 1,59,91,627 பேரும் வருகை புரிந்துள்ளனர்.
கோடை விடுமுறையான மே மாதத்தில் அதிகபட்சமாக 2,37,51,936 உள்நாட்டு, 33,245 வெளிநாட்டு என 2,37,85,181 சுற்றுலாப் பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். அதன்படி, ஜூலை மாதம் வரை கடந்த 7 மாதங்களில் மட்டும் 11 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரத்து 350 சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு வந்துள்ளனர். இதில் 1,46,785 பேர் வெளிநாட்டினர்.
வேலைவாய்ப்பு பெருகும்
கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடும்போது, சுற்றுலா பயணிகளின் வருகை இந்த ஆண்டு அதிகமாகவே இருக்கும் என்றும், இதன்மூலம் சுற்றுலாத் துறை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி, சுற்றுலா தொழில்துறையில் வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கான சூழலும் உருவாகும் என சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.