

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள காதல் மலர்கள் மற்றும் பெண் வடிவிலான ப்யூசியா மலர்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றன.
கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம்.
தற்போது காதல் மலர்கள், பெண் வடிவிலான ப்யூசியா மலர்கள் அதிக அளவில் பூத்துக் குலுங்குகின்றன. அதில் ப்யூசியா மலர் பார்ப்பதற்கு மனித உருவில் தலை, ஆடை, பாவாடை அணிந்த உடல், கால்களை உடைய பெண் போன்று இருக்கும். காற்றில் மலர் ஆடும்போது, பெண் நடமாடுவது போல் தோன்றும்.
இதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். இது குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறியதாவது:
சிவப்பு, வெள்ளை, மஞ்சள் வண்ணங்களில் காதல் மலர்கள் உள்ளன. இதேபோல் பெண் வடிவிலான ப்யூசியா மலர் சிவப்பு, வெள்ளை, நீல நிறம் என 5-க்கும் மேற்பட்ட வண்ணங்களில் உள்ளன. இந்த இரண்டு மலர்களும் ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை உடையது என்றனர்.