நவீன வசதிகளுடன் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் பாரம்பர்ய நீராவி படகு: 78 ஆண்டுகள் பழமையானது

‘பி.எஸ்.போபால்’ நீராவி படகு
‘பி.எஸ்.போபால்’ நீராவி படகு
Updated on
2 min read

கொல்கத்தா: 78 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட பழமை வாய்ந்த பாரம்பரிய நீராவி படகு நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

கடந்த 1944-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் டம்பர்டன் கப்பல் தளத்தில் உருவாக்கப்பட்ட நீராவி படகான ‘பி.எஸ்.போபால்’, கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தால் (கொல்கத்தா துறைமுக பொறுப்புக் கழகம்) பயிற்சி கப்பலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு பயிற்சி நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு பாரம்பரியமிக்க இந்த படகை புதுப்பித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மோசமாக சிதிலம் அடைந்திருந்த நீராவிப் படகை நீண்ட கால ஒப்பந்தத்தில் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

ஒப்பந்த காலம் முழுவதும் கொல்கத்தா துறைமுகத்தின் பொறுப்பிலேயே படகு இருக்கும் வகையில் வெளிப்படையான ஏல முறையில் நீண்ட கால ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தின்படி, கரை ஓரத்தில் பி.எஸ்.போபால் படகு நிறுத்தி வைக்கப்பட்டு, கண்காட்சி அரங்குகள், உணவகம், சிறிய கூட்ட அரங்குகள் உள்ளிட்டவை அதில் இடம்பெற்றிருக்கும். படகை‌ புதுப்பிக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதோடு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகள் சோதனை முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் படகு தற்போது இயக்க நிலையில் இல்லாத போதும், அதன் அடிப்படை அமைப்பை மாற்றாமல், 1944-ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட போது இருந்த உணர்வை பயணிகளுக்கு வழங்கும் வகையில் ஆற்றில் இந்த படகு நகர்வதற்கு ஏதுவாக பிரதான என்ஜின்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன.

இந்திய துணை கண்டத்தில் முதன் முறையாக இதுபோன்ற புதுப்பிக்கப்பட்ட படகை, அடுத்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத் தலைவர் வினித் குமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in