

அமராவதி வனப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் சூழல் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டு, தொடங்கிய வேகத்திலேயே நிறுத்தப்பட்டது. இத்திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலையை அடுத்த அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னாற்றில் இருந்து தளிஞ்சி மலை கிராமத்துக்கு செல்லும் வனப்பகுதியில் கூட்டாறு உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து அமராவதி அணையை நோக்கி பாயும் பாம்பாறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து பாயும் சின்னாறு, தேனாறு ஆகிய 3 ஆறுகளும் சங்கமிக்கும் இடமே கூட்டாறு என அழைக்கப்படுகிறது.
இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்துக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சூழல் சுற்றுலா திட்டம் எவ்வித காரணமும் இன்றி கைவிடப்பட்டது.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது: தளிஞ்சியில் உள்ள மலைவாழ் பெண்களை சுய உதவிக்குழுவாக இணைத்து, அவர்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் கூட்டாற்றில் சூழல் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டது. பரிசல் பயணம், வனப்பகுதியில் சில மைல் தொலைவு நடைபயணம், மலைவாழ் மக்களால் சமைக்கப்பட்ட உணவு, தேநீர் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இருந்ததால், சுற்றுலா பயணிகளிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றது.
வன அலுவலர்கள் மாறியதால், இத்திட்டம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே கிடப்பில் போடப்பட்டது. அருகில் உள்ள கேரள வனத்துறை அங்குள்ள மலைவாழ் மக்களை கொண்டு சூழல் சுற்றுலா திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதேபோல இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து அமராவதி வன அலுவலர் சுரேஷ்குமார் கூறும்போது, ‘‘கூட்டாறு சூழல் சுற்றுலா திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துவிட்டது. அதே இடத்தில் ஸ்கைவாக், மரவீடு, மாறுபட்ட வனப்பகுதியை பார்வையிடல் என பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கிய திட்டம் வனத்துறை அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது.
தேவையான நிதி ஒதுக்கப்பட்டால், புதுப்பொலிவுடன் மீண்டும் சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும்,’’ என்றார்.