

ஏற்காட்டில் குளுமையான சீதோஷ்ண நிலை நீடித்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணி களின் வருகை , நேற்று அதிகரித்திருந்தது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டு முழுவதும் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை தினம் என்பதால், வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஏற்காட்டுக்கு வந்திருந்தனர். அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, சேர்வராயன் கோயில், லேடீஸ் சீட், பொட்டானிக்கல் கார்டன், சில்ரன்ஸ் பார்க், ரோஜா தோட்டம், பக்கோடா பாயின்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் திரண்டு இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
ஏற்காடு ஏரியில் விசைப் படகு, பெடல் படகு, கைவிசைப் படகுகளில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
விடுமுறை தினமான நேற்று, மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் காணப்பட்டது. அந்த வகையில் அணை பூங்காவுக்கு 11,142 பேர், அணையின் வலது கரைப் பகுதியில் உள்ள பவள விழா கோபுரத்துக்கு 1,695 பேர் என, 12,837 பேர் வந்து சென்றுள்ளனர். நுழைவு கட்டணமாக ரூ.64,185 வசூல் ஆகியுள்ளது.