Last Updated : 18 Aug, 2022 05:46 PM

 

Published : 18 Aug 2022 05:46 PM
Last Updated : 18 Aug 2022 05:46 PM

மூணாறு தேயிலை தோட்டங்களில் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க சிறப்பு ஏற்பாடு

மூணாறில் தேயிலைத் தோட்ட தொழிலாளர் தோற்றத்தில் புகைப்படம் எடுத்து மகிழும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். | படம்: என்.கணேஷ்ராஜ்

போடி: மூணாறு தேயிலை தோட்டங்களில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் அட்டைப்புழு ஒழிப்பு முறைகள் கையாளப்பட்டு தேயிலை கொழுந்து சேகரிக்கும் கூடைகளும் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. பசுமையான பள்ளத்தாக்கு, பார்வையை மறைக்கும் மூடுபனி, படகுசவாரி, நீர்வீழ்ச்சி, மலையேற்றம் என்று சுற்றுலாப் பயணிகளை கவரும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதனால் உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இவர்களை கவரும் வகையில் தேவிகுளம் அருகே லாக்கார்டு டீ எஸ்டேட்டில் பிரத்யேக புகைப்படத்தலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக இங்குள்ள தேயிலைச் செடிகள் நேர்த்தியாக வெட்டப்பட்டு குறுக்கும் நெடுக்கும் பல்வேறு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேயிலை கொழுந்துகளை சேகரிக்கும் கூடைகளும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தேயிலைச் செடிகளுக்கு மத்தியில் நின்று பசுமை பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் கூடைகளை கையில், தலையில் மாட்டியபடி தேயிலை பறிப்பது போன்ற புகைப்படங்களையும் அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனர்.

பொதுவாக தேயிலைத்தோட்டங்களில் அட்டைப்புழு அதிகளவில் இருக்கும். இவற்றைத் தடுப்பதற்காக வாரம் ஒருமுறை உப்பு உள்ளிட்டவை இப்பகுதியில் தூவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு நுழைவுக்கட்டணமாக ரூ.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தை உறிஞ்சும் அடை தாக்குதல் இல்லாமல் தேயிலை தோட்டங்களில் புகைப்படம் எடுக்கும் நிலை சுற்றுலாப் பயணிகள் பலரையும் கவர்ந்துள்ளது.

இது குறித்து போட்டோகிராபர் ரூபன் கூறுகையில், "சுற்றுலாப் பயணிகளுக்காக தனியார் எஸ்டேட் பிரத்யேக புகைப்பட தளத்தை உருவாக்கி உள்ளது. தேவைப்படுபவர்களுக்கு நாங்கள் புகைப்படம் எடுத்து தருகிறோம். ஏ4 அளவில் பிரின்ட் போட்டுத்தருவதுடன் வாட்ஸ்அப் செயலிக்கும் இந்தபடத்தை அனுப்புகிறோம். கட்டணம் ரூ.100ஆகும்.

மூணாறு வருபவர்களுக்கு எத்தனை ஆண்டுகளாலும் மறக்க முடியாத நினைவுகளாக இது அமையும். ஆகவே பலரும் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x