

கோவை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்திற்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை யால் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகள் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் அருவிகளில் அதிகம் கொட்டுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி அக்.22-ம் தேதி புதன்கிழமை முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிமாக மூடப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.