கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும்: திண்டுக்கல் ஆட்சியர் தகவல்

கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும்: திண்டுக்கல் ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

கொடைக்கானல்: சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ”சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் 'epass.tnega.org" என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ-பாஸ் பெற்று பயணிக்கும் முறை கடந்த 2024ம் ஆண்டு மே 7ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கொடைக்கானல் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் வகையிலும் சுற்றுலாப் பயணிகளின் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப் படுத்தும் பொருட்டும், வார நாட்களில் 4,000 வாகனங்களும் வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களும் இ-பாஸ் பெற்று கொடைக்கானலுக்கு செல்ல அனுமதிக்கும் நடைமுறை மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அரசு பேருந்துகள், உள்ளூர் வாகனங்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் சரக்குப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற ஏற்கனவே விலக்களிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், 5 லிட்டருக்கு குறைவாக உள்ள தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து வகையான குளிர்பான பாட்டில்கள் தடை செய்யப் பட்டுள்ளன.

அதன்படி, 5 லிட்டருக்கும் குறைவாக உள்ள தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து வகையான குளிர்பான பாட்டில்கள் வைத்திருந்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 வீதம் பசுமை வரி விதிக்கப்படும்” என்று திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in