குமரியில் ஓய்ந்தது மழை - திற்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பின்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

திற்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பின்பு வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
திற்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பின்பு வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
Updated on
1 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நின்ற நிலையில் திற்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பின்னர் இன்று (ஜூன் 20) சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக பெய்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை நீர்மட்டம் 45.13 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 629 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில் அணையில் இருந்து 750 கனஅடி தண்ணீர் மதகு வழியாகவும், 131 கனஅடி தண்ணீர் உபரியாகவும் வெளியேறி வருகிறது.

மழையுடன் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரால் புத்தன்அணை, திற்பரப்பு அருவி, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக கனமழை நின்றுள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பின்னர் சுற்றலா பயணிகள் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67.25 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 437 கனஅடி தண்ணீர் வருகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 8 அடியாக உள்ளது. சிற்றாறு ஒன்று அணையின் நீர்மட்டம் 11.12 அடியாக உள்ளது. அணைக்கு 39 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றாறு இரண்டு அணையின் நீர்மட்டம் 11.21 அடியாக உள்ளது. அணைக்கு 58 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது.

மழை நின்றதை தொடர்ந்து குலசேகரம், பேச்சிப்பாறை, திற்பரப்பு, கீரிப்பாறை, கரும்பாறை, களியல், திருவட்டாறு உட்பட மாவட்டத்தில் பரவலாக உள்ள ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால்வெட்டும் பணி மீண்டும் தொடங்கியது. இதைப்போல் தேங்காய் வெட்டும் தொழிலும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கட்டிட தொழில், மீன்பிடி தொழில் என அனைத்து தொழில்களும் மீண்டும் சகஜநிலைக்கு வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in