Published : 09 Jun 2025 02:05 PM
Last Updated : 09 Jun 2025 02:05 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே முத்துக்குடாவில் படகு சவாரி உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.3 கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கடற்கரை சுற்றுலாத் தலம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 43 கி.மீ. தொலைவுக்கு கடற்கரை உள்ளது. 2 இடங்களில் விசைப்படகு மீன்பிடி இறங்குதளங்களும், 42 இடங்களில் நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளங்களும் உள்ளன. கடற்கரை இருந்தும், பொழுதுபோக்குவதற்கு உரிய வசதிகள் எதுவும் இல்லை. இதையடுத்து, கடற்கரை சுற்றுலாத் தலம் அமைப்பது குறித்து 2021-ல் வல்லுநர் குழுவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில், ஆவுடையார்கோவில் அருகே நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி முத்துக்குடாவில் சுற்றுலாத் தலம் அமைக்க சுற்றுலாத் துறை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து ரூ.3 கோடியில் படகு குழாம், உணவகம், அலுவலகம், கழிப்பறைகள், மின் விளக்குகள், பேவர் பிளாக் நடைபாதை, பரந்து விரிந்த மணற்பரப்பு உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த சுற்றுலாத் தலம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முத்துக்குடா கிராமத்தினர் கூறியதாவது: முத்துக்குடாவில் கடற்கரை சுற்றுலாத் தலம் அமைக்கப்பட்டு வருவதன் மூலம் உள்ளூர் மீனவ மக்களின் பொருளாதாரம் மேம்படும். கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து முத்துக்குடா குடியிருப்பு வழியாக கடற்கரைக்கு செல்லும்சுமார் 2 கி.மீ. சாலை குண்டும், குழியுமாகவும், குறுகிய அளவிலும் உள்ளது. இந்த சாலையை உடனே மேம்படுத்த வேண்டும். சாலையோரம் அடர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும். வழிநெடுகிலும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.
மேலும், சுற்றுலாத் தலத்தில் சிறுவர் பூங்காவை ஏற்படுத்த வேண்டும். படகு சவாரிக்கு ஏற்ற தரமான படகுகளை பயன்படுத்த வேண்டும். மேலும், கைவிடப்பட்ட நிலையில் உள்ள புயல் பாதுகாப்பு கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். இந்த பணிகளை முடித்து விட்டு, சுற்றுலாத்தலத்தை திறக்க வேண்டும் என்றனர்.
அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் கூறியதாவது: கடற்கரை சுற்றுலாத் தலத்தில் ரூ.3 கோடியில் கட்டிடம் கட்டும் பணி ஏறத்தாழ 90 சதவீதத்துக்கும் மேல் முடிவடைந்துள்ளது. எஞ்சியுள்ள ஓரிரு பணிகளும் விரைவில் முடிக்கப்படும். படகுகள் மூலம் அலையாத்திக் காடுகளை சுற்றிப் பார்வையிட்டு ரசிக்கலாம். சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்குரிய நிதியைப் பெற்று சாலை அமைக்கப்படும். கூடுதலான வசதிகளையும் சுற்றுலாத் துறை அமைச்சரிடம் பேசி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் சுற்றுலாத் தலத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT