மெகா எலுமிச்சை, பழ ரச கோப்பை, பழங்கால கார் - குன்னூர் சிம்ஸ் பூங்கா பழக் கண்காட்சியின் சிறப்பம்சங்கள் என்ன?

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மெகா எலுமிச்சை, பழ ரசக் கோப்பை,  விசில், கண்ணாடி, நீர் சறுக்கு மட்டை அலங்காரங்கள்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மெகா எலுமிச்சை, பழ ரசக் கோப்பை, விசில், கண்ணாடி, நீர் சறுக்கு மட்டை அலங்காரங்கள்.
Updated on
1 min read

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்காட்சி நேற்று தொடங்கியது. இதையொட்டி 3.8 டன் எடையிலான பழங்களில் அமைக்கப்பட்டிருந்த மெகா எலுமிச்சை, பழ ரச கோப்பை, பழங்கால கார் வடிவமைப்புகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தன.

நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு கோடை விழா கடந்த 3-ம் தேதி காய்கறிக் கண்காட்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, ரோஜா கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சிகள் நடைபெற்றன. கடந்த 15-ம் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், 65-வது பழக் கண்காட்சி குன்னூர் சிம்பூங்காவில் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில், அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் பழக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார்.

இதில், எலுமிச்சை பழங்களைக் கொண்டு ராட்சத வடிவமைப்பு, பழரசக் கோப்பை, கடற்கரை குடை, கார், பழ கேக், பழ ஐஸ்கிரீம், தொப்பி, விசில் கண்ணாடி, நீர் சறுக்கு மட்டை, பழ கூடைப்பந்து மற்றும் இளநீர் போன்ற வடிவமைப்புகள் 3.8 டன் எடையிலான பல்வேறு பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், கரூர், வேலூர், திருப்பத்தூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துறையினரால் பல்வேறு பழங்களைக் கொண்டு விதவிதமான உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கரூர் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் மயில், திருப்பத்தூர் சார்பில் அன்னம், பெரம்பலூர் சார்பில் பட்டாம் பூச்சி, திருச்சி சார்பில் டிராகன், புதுக்கோட்டை சார்பில் வரையாடு, வேலூர் சார்பில் கரடி, கடலூர் சார்பில் மீன்கள், கன்னியாகுமரி சார்பில் கலங்கரைவிளக்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பழக் கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. தொடக்க விழாவில், குன்னூர் கோட்டாட்சியர் சங்கீதா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிபிலா மேரி, சிம்ஸ் பூங்கா உதவி இயக்குநர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in