தலைமன்னார் அருகே உள்ள மணல் தீடை
தலைமன்னார் அருகே உள்ள மணல் தீடை

தலைமன்னார் அருகே உள்ள மணல் தீடைகளுக்கு விரைவில் சுற்றுலா படகு சேவை: இலங்கை அரசு நடவடிக்கை

Published on

ராமேசுவரம்: இலங்கை தலைமன்னாரிருந்து இந்திய கடல் எல்லை வரை உள்ள மணல் தீடைகளுக்கு சுற்றுலாப் படகு சேவையை தொடங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலுமான கடல் பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. இதில் 6 தீடைகள் இந்தியப் பகுதியிலும், 7 தீடைகள் இலங்கை கடல் பகுதியிலும் உள்ளன.

இந்நிலையில், இலங்கை அரசு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், அந்நாட்டின் கடல் எல்லைப் பகுதிக்குள் உள்ள மணல் தீடைகளுக்கு படகு சேவையை தொடங்கத் திட்டமட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் மன்னாரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் கனகேஸ்வரன் தலைமை வகித்தார். இலங்கை கடற்படை அதிகாரிகள், சுற்றுலாத் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில், தலைமன்னாரிலிருந்து முதல், இரண்டாவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது தீடைகளில் படகு சவாரியை நடத்த முடிவு செய்யப்பட்டது. மூன்றாவது மணல் தீடையில் இலங்கை கடற்படையினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாலும், நான்காவது தீடையில் பறவைகள் அதிக அளவில் தங்கியுள்ளதாலும், 7-வது தீடை சர்வதேச கடல் எல்லை அருகே உள்ளதாலும், இந்த 3 தீடைகளுக்கு சுற்றுலா படகு சவாரியை மேற்கொள்ள வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in