ரூ.100-ல் ஊட்டியை பேருந்தில் சுற்றிப் பார்க்கலாம்! - புதிய சேவை எப்படி?

ரூ.100-ல் ஊட்டியை பேருந்தில் சுற்றிப் பார்க்கலாம்! - புதிய சேவை எப்படி?
Updated on
1 min read

ஊட்டி: மொத்த ஊட்டியையும் ரூ.100-ல் சுற்றிப் பார்க்க சுற்றுப் பேருந்து திட்ட சேவை ஊட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டணம் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனை யொட்டி, சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கோடை சீசனில் மட்டும் சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒரே சமயத்தில் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருவதால் நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்துத் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் சீசன் சமயங்களில் சுற்றுப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சுற்றுப் பேருந்துகளின் இயக்கம் சமீபத்தில் தொடங்கியது. முதலில் 3 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் தற்போது 8 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை விடுமுறையைக் கொண்டாட ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காகவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் சுற்றுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

மத்தியப் பேருந்து நிலையத்தில் சுற்றுப்பேருந்துகளின் பயணம் தொடங்கி, தண்டர்வேர்ல்டு, படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், டீ ஃபேக்டரி மற்றும் ரோஜா பூங்கா வழியாக மீண்டும் மத்தியப் பேருந்து நிலையத்தை வந்தடையும். காலையில் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து செல்பவர்கள் தாவரவியல் பூங்காவைக் கண்டுகளித்த பின்னர், அடுத்த பேருந்தில் தொட்டபெட்டாவுக்கு செல்லலாம்.

இந்தப் பேருந்தில் ஒரு நாளைக்கு ஒருமுறை பயணச்சீட்டு வாங்கினால் மட்டுமே போதுமானது. இதைக் காண்பித்து அந்த நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளலாம். கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 25 சுற்றுப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. நடப்பாண்டில் தேவைப்பட்டால் சுற்றுப்பேருந்துகளின் சேவை அதிகரிக்கப்படும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in