ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் இ-பாஸ் பதிவு குறித்து அதிகாரிகள் சோதனை தீவிரம்

கல்லாறு சோதனைச்சாவடியில் சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பதிவினை ஆய்வு செய்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா.
கல்லாறு சோதனைச்சாவடியில் சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பதிவினை ஆய்வு செய்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா.
Updated on
1 min read

மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டத்தின் உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என மேட்டுப்பாளையம் கல்லாறு சோதனைச் சாவடியில் அதிகாரிகள் இன்று (ஏப்.1) தீவிரமாக சோதனை நடத்தினர்.

நீலகிரி மாவட்டத்தின் உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள், இ-பாஸ் பதிவு செய்து இருக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடு இன்று (ஏப்.1) முதல் அமலுக்கு வந்தது. கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் நீலகிரி மாவட்டத்துக்கு செல்லவதற்கான முக்கிய வழித்தடமாக உள்ளது. மேட்டுப்பாளையம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் நீலகிரிக்கு சென்று வருகின்றன.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாறு பகுதியில் உள்ள இ-பாஸ் சோதனைச் சாவடியில், நீலகிரி செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என நீலகிரி மாவட்ட நிர்வாகத்தினர், காவல் துறையினரால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கல்லாறு இ-பாஸ் சோதனை சாவடியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தியாளர்களிடம் கூறும்போது, “தினமும் 6 ஆயிரம் வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது.

அரசு பேருந்து, ஆம்புலன்ஸ் வாகனம், சரக்கு வாகனங்கள், நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள், நீலகிரி மாவட்டத்தில் வசிப்போருக்கு இ-பாஸ் தேவையில்லை. தற்போது வரை 2,500 வாகனங்கள் வந்துள்ளன. இந்த நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்லாறு இ-பாஸ் சோதனை சாவடியில், பூம் பேரியர் அமைக்க உள்ளோம். இ-பாஸ் பெற்ற வாகனங்களின் நம்பர் பிளேட் வாயிலாக தானியங்கி முறையில், செக் செய்யும் வகையில் இந்த பூம் பேரியர் அமைய உள்ளது. அடுத்த வாரம் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

இத்திட்டம் நடைமுறைக்கு வரும் போது, ஊழியர்கள் அதிகம் தேவைப்பட மாட்டார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. மற்ற சோதனைச்சாவடிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in