Published : 05 Mar 2025 06:05 PM
Last Updated : 05 Mar 2025 06:05 PM
உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, மேட்டுப்பாளயைம் - உதகை இடையே கோடை கால சிறப்பு மலை ரயில் சேவை வரும் 28-ம் தேதி முதல் ஜூலை மாதம் 7-ம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மலை ரயில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்றது. இதில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், கோடை சீசனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் - குன்னூர் - உதகை இடையே தலா ஒரு முறை, உதகை - குன்னூர் இடையே, தலா நான்கு முறை மலை ரயில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக கோடை கால சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம் - உதகை இடையே கோடை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையில் இம்மாதம் 28-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை சனி மற்றும் திங்கட்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இதில், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 40 முதல் வகுப்பு மற்றும் 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். குன்னூர் முதல் உதகை வரையில் மொத்தம் 220 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும்.
மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 2.25 மணிக்கு உதகைக்கு வந்தடையும், காலை 11.25 மணிக்கு உதகையிலிருந்து புறப்படும் ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT