Published : 01 Mar 2025 05:12 PM
Last Updated : 01 Mar 2025 05:12 PM
ராமநாதபுரம்: ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை சூழல் சுற்றுலா படகு சவாரி மூலம் அழகிய மணல் திட்டுகள், அரிய வகை பவளப்பாறைகளை கண்டு ரசிக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட பிச்சை மூப்பன் வலசை கடற்கரை கிராமத்தில் மன்னார் வளைகுடா பகுதியில், 1 கி.மீ. தொலைவில் கடலுக்கு நடுவே மணல் திட்டுகள், தீவுகளின் இயற்கை அழகு, கடலுக்குள் காணப்படும் அரியவகை பவளப்பாறைகள், கடல்பாசிகள், வண்ண மீன்களின் அணிவகுப்பு அடங்கிய சொர்க்க பூமியாக ஏர்வாடி பிச்சைமூப்பன்வலசை சூழல் சுற்றுலா மையம் திகழ்கிறது.
இங்கு மன்னார் வளைகுடா தேசியப் பூங்கா வனத்துறையினர் 'சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையம்' படகு சவாரியுடன் அமைத்துள்ளனர். ஏர்வாடியிலிருந்து 2 கி.மீ தொலைவில் பிச்சை மூப்பன் வலசை கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. சொந்த வாகனங்களில் செல்லலாம். பேருந்தில் சென்றால் ஏர்வாடி தர்ஹாவில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் செல்ல வேண்டும். இங்கு படகில் சுற்றுலாப் பயணிகள் 12 பேர் உயிர் காக்கும் உடையுடன் (லைஃப் ஜாக்கெட்) அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ஒரு கி.மீ. தூரம் சென்றதும், மணல் திட்டில் இறக்கிவிட்டு, அங்கு கடல் அழகை ரசிக்க விடுகின்றனர். அதன்பின் அங்கிருந்து கண்ணாடி அடித்தளம் கொண்ட படகுக்கு சுற்றுலாப் பயணிகள் மாற்றப்படுகின்றனர். அதில் சென்று கடலுக்குள் அமைந்துள்ள பல்வேறு வகையான பவளப்பாறைகளை ரசிக்க முடியும். பவளப்பாறைகளுக்குள் உள்ள பல்வேறு வகையான கலர் மீன்கள், நண்டு வகைகள், மீன் குஞ்சுகளை பார்த்து ரசிக்கலாம்.
குறிப்பாக அரியவகை பவளப்பாறைகளான மான்கொம்பு, தாமரை இலை, மனித மூளை, விரல், பச்சை திராட்சைப் பழ வடிவம் உள்ளிட்ட பல்வேறு வகையான பவளப்பாறைகளை கண்ணாடி அடிப்படகில் இருந்து கண்டுகளிக்கலாம். மேலும் கடற்புற்கள், கடல் அட்டைகள், கடல்பாசிகள், சங்கு கள், சிப்பிகள் போன்றவற்றை பார்க்க முடியும்.
இதுபோக மணல் திட்டு பகுதியிலிருந்து சிறு, சிறு தீவுகளின் எழில்மிகு இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். பவளப்பாறைகள் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும், கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும் உகந்தவையாக அமைந்துள்ளன. பிச்சை மூப்பன் வலசை சூழல் சுற்றுலா மைய வனச்சரக அலுவலர் பிரதாப் கூறுகையில், தற்போது தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வனத்துறை படகுக்கு ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு சலுகையாக ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. படகு சுற்றுலா மையம் காலை 9 முதல் மாலை 4.30 மணி வரை செயல்படுகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை. கடற்கரையில் மீனவ சமுதாய மக்களால் நடத்தப்படும் கேன்டீனும் செயல்படுகிறது. பயணிகள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு கடற்கரையில் இறக்கி விடப்படுகின்றனர், எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT