

நெல்லிக்குப்பம்: சுற்றுலாத் துறை சார்பில் கூடுவாஞ்சேரி அருகே நெல்லிக்குப்பம் கிராமத்தில் நடந்த பொங்கல் விழாவில் கிராம மக்களுடன் இணைந்து வெளிநாட்டு பயணிகள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
ஆண்டுதோறும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் தினத்தன்று தமிழர்கள் பொங்கலை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விழா நடத்தி நேரில் காட்டுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே நெல்லிக்குப்பம் கிராமத்தில் இன்று காலை (ஜன 12) நடந்தது. வெளிநாட்டு பயணிகள் 60 பேர் விழா நடக்கும் நெல்லிக்குப்பம் கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழக கலாச்சாரப்படி கிராம எல்லையில் வெளிநாட்டினருக்கு தமிழர் பாரம்பரிய முறைப்படி மலர்மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, மேளதாளம் முழங்க, சுற்றுலாத்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அங்குள்ள கோயில் வளாகத்தில் பொங்கல் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் வரவேற்றார்.
செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயணசர்மா, பயிற்சி ஆட்சியர் மாலதி ஹெலன், திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் பூ மகள் தேவி ஆகியோர் பங்கேற்றனர். வெளிநாட்டினரை மகிழ்விக்க கரகம், காவடியாட்டம், பரதநாட்டியம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் வெளிநாட்டு பயணிகள் சிலர் கலைஞர்களுடன் இணைந்து கிராமிய பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர்.
மேலும் வெளிநாட்டுப் பயணிகள் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளிலும் பயணம் செய்து கிராமத்தின் அழகை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டினருக்கு உறியடி அடித்தல் போட்டி நடத்தப்பட்டு சுற்றுலாத் துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பணிகளுக்கு தலை வாழை போட்டு சைவ விருந்து உணவு அளிக்கப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், ஹாலந்து, கனடா, பெல்ஜியம், சுவிஸ், டென்மார்க், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பயணிகள் பங்கேற்றனர். விழாவின் இறுதியில் வெளிநாட்டு பயணிகளுக்கு கரும்பு, சுண்டல், பொங்கல் வழங்கப்பட்டது. அதை வாங்கி அவர்கள் ருசித்து சாப்பிட்டனர். சுற்றுலாத்துறை பொங்கல் விழாவால் நெல்லிக்குப்பம் கிராமம் வெளிநாட்டினரின் வருகையால் களைகட்டி காணப்பட்டது.