

நாகர்கோவில்: கன்னியாகுமரி கண்ணாடி இழைப் பாலம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக நேற்றில் இருந்து திறந்து அனுமதிக்கப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருகை புரிகின்றனர்.
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் பொதுமக்கள் பார்வைக்காக கடந்த 30-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இப்பாலம் திறக்கப்பட்ட பின்னர் சூறைக்காற்று மற்றும் கடல் நீர்மட்டம் தாழ்வால் 3-ம் தேதி வரை படகு சேவை பாதிக்கப்பட்டது.
நேற்றில் இருந்து இயல்பு நிலை திரும்பியது. இதனால் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட பாலம் திறந்து அனுமதிக்கப்பட்டது. கடந்த இரு நாட்களாக படகு மூலம் சென்று சுற்றுலா பயணிகள் கண்ணாடி இழைப் பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
குறிப்பாக கன்னியாகுமரி கண்ணாடி இழைப் பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறையை பயன்படுத்தி குமரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் கண்ணாடி இழைப் பாலத்தில் பயணம் செய்தனர். அவர்கள் கண்ணாடி இழைப் பாலத்தில் நின்றவாறு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கண்ணாடி இழைப் பாலத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்ததை தொடர்ந்து அங்கு சென்ற குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பாலப்பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் அவர் சுற்றுலா பயணிகள், பள்ளி குழந்தைகளிடம் பாலம் குறித்த கருத்துக்களை கேட்டறிந்து அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.
பின்னர் ஆட்சியர் அழகுமீனா கூறுகையில்: நெடுஞ்சாலைத்துறை சார்பில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தின் தரைத்தளப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கடந்த 30-ம் தேதி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதலமைச்சரால் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 4-ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கண்ணாடி இழை தரைத்தள பாலம் திறந்து விடப்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கண்ணாடி பாலத்தில் நடந்து கடலின் அழகை கண்டு ரசித்தார்கள். அவர்களிடம் கண்ணாடி இழை தரைத்தள பாலத்தை குறித்த கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. மேலும், பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இணைக்கும் கண்ணாடி பாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் மற்றும் பிற துறை அலுவலர்களிடம் செயல்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறியப்பட்டதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.
அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் ஆறுமுகம், மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.